ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தையொட்டியுள்ள கலிங்கப்பட்டி. தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டதும் வைகோ ம.தி.மு.க-வை தொடங்கியது முதல் விருதுநகர் மாவட்டத்திற்கும், அவருக்கும் நெருங்கிய நெருக்கம் உண்டு. அதனால்தான் சிவகாசி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். இதனால், விருதுநகர் மீது வைகோவுக்கு தனிப்பாசம் உண்டு.
தி.மு.க-வில் இருந்து தன்னோடு நீக்கப்பட்ட ஆர்.எம்.சண்முகசுந்தரம் தான் இதுவரை ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்டச் செயலாளராக பதவி வகித்தார். ம.தி.மு.க-வை இங்கு வளர்க்க ஆர்வம் காட்டவில்லை. ம.தி.மு.க நிர்வாகிகளோடு சமூகமான உறவு இல்லை என்று இவர் மீது கட்சியினருக்கு அதிருப்தி உண்டு.
இதற்கிடையில் ம.தி.மு.க-வின் தலைமை நிலைய செயலாளராக துரை வைகோ நியமித்ததில் ’’வைகோ வாரிசு அரசியலை இங்கு நுழைத்து விட்டார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’’என்று ஆர்.எம். சண்முக சுந்தரம், சிவகங்கை செவந்தியப்பன் ஆகியோர் கொதித்தனர். இதையடுத்து ’’மதிமுகவுக்கு எதிராக செயல்படும் உங்களை ஏன் கட்சியை விட்டு நீக்க கூடாது?’’என்று ஷோகாஸ் நோட்டீஸ்சை வைகோ அனுப்பினார். இதை தொடர்ந்து விருதுநகர் ம.தி.மு.க-வில் ஆர்.எம்.சண்முகசுந்தரம் ஒரங்கட்டப்பட்டார்.
இந்நிலையில் சாத்தூர் சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு டாக்டர் ரகுராமன் எம்.எல்.ஏ-வாக உள்ளார். இதை தொடர்ந்து வரும் எம்.பி., தேர்தலில் விருதுநகருக்கு சீட்டு கேட்டு வைகோவின் மகன் துரை வைகோ சத்தம் இல்லாமல் காய் நகர்த்துகிறார். அதற்கு வசதியாக விருதுநகர் மாவட்ட மதிமுகவை பலப்படுத்துவதற்கு வைகோவும், துரை வைகோவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து மதிமுக கட்சியின் 5வது அமைப்பு தேர்தல் எல்லா மாவட்டங்களிலும் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. ஏப்.29ம் தேதி மதிமுக மாவட்ட செயலாளர் பதவி மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல் நடந்தது. இதில் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்டம் கிழக்கு, மத்திய, மேற்கு என்று 3 ஆக பிரிக்கப்பட்டு அந்த மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் நடந்தது. அதில் புதிய 3 மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
விருதுநகர் கிழக்கு மாவட்டம்: அருப்புக்கோட்டை, திருச்சுழி சட்டசபை தொகுதிகள். இதன் மாவட்ட செயலாளராக சாத்தூர் தொழிலதிபர் கண்ணன் தேர்வாகியுள்ளார். மதிமுக மாநில இலக்கிய அணி நிர்வாகியாக பதவி வகித்துள்ளார். லாரி டிரான்ஸ்போர்ட் என்று பல தொழில்களை சொந்தமாக கொண்ட இவர் பெரிய தொழிலதிபர். வைகோவுக்கு நெருக்கமான இவர் மதிமுக கட்சி நிகழ்ச்சிகளுக்கு பணத்தை தண்ணீராய் செலவழிப்பவர். சாத்தூர் ஓ.மேட்டுப்பட்டியை சொந்த ஊராக கொண்ட கண்ணன் கடந்த சட்டசபை தேர்தலில் மதிமுகவில் சாத்தூருக்கு சீட்டு கேட்டார். ஆனால் இவருக்கு தரப்படவில்லை. சாத்தூரை சேர்ந்த டாக்டர் ரகுராமனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. தற்போது இவர் சாத்தூர் எம்.எல்.ஏ-வாக பதவி வகிக்கிறார். சீட் விவகாரத்தில் தொழிலதிபர் கண்ணன் அப்செட். தற்போது வைகோ தொழிலதிபர் கண்ணனை கிழக்கு மாவட்ட செயலாளராக்கி சர்ப்ரைஸ் தந்துள்ளார். சென்னையில் செட்டிலான தொழிலதிபர் கண்ணன் இங்கே கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் ஆக்டிவ்வாக இருப்பாரா? என்று மதிமுகவினர் மத்தியில் புகைச்சல் கிளம்பியுள்ளது.
கிழக்கு மாவட்ட செயலாளர் ரேஸ்சில் சாத்தூர் யூனியன் துணைத்தலைவர் செல்லத்தாயின் கணவர் மேட்டமலை குணசேகரன், பந்தல்குடி மாரியப்பன் ஆகியோரது பெயர்கள் அடிப்பட்டன. ஆனால் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கவில்லை. மத்திய மாவட்டம் சிவகாசி, விருதுநகரை உள்ளடக்கிய இதன் மாவட்ட செயலாளராக கம்மாபட்டி ரவிச்சந்திரன் தேர்வாகியுள்ளார். இவரது தந்தை வீரையா திமுக மாவட்ட பிரதிநிதி மற்றும் மல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராக பதவி வகித்துள்ளார். தீவிர திமுக குடும்பம். திமுகவில் இருந்து வைகோ விலகியதும் அவரோடு விலகி மதிமுகவில் பயணிப்பவர் அவரது மகன் கம்மாபட்டி ரவிச்சந்திரன். மதிமுகவில் இளைஞரணி, தலைமை செயற்குழு உறுப்பினர் என்று பதவி வகித்த ரவிச்சந்திரன் இப்போது வைகோ மற்றும் துரை வைகோ தயவில் மாவட்ட செயலாளராகியுள்ளார். பண பலம் மற்றும் மதிமுகவின் தீவிர விசுவாசி என்பது இவரது பிளஸ்.
ஆனால், முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரத்துக்கும், இவருக்கு ஏற்பட்ட மோதலில் சில காலம் மதிமுகவில் தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தார் என்பது மைனஸ். கடந்த அதிமுக ஆட்சியில் ரவிச்சந்திரனின் பட்டாசு ஆலையை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் மிரட்டி இவரிடம் இருந்து பறித்து கொண்டார். அது தொடர்பாக துரை வைகோ உதவியுடன் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கு எதிராக சட்டப்போராட்டங்கள் நடத்தி வருகிறார். இவருக்கு எதிராக மதிமுக மாவட்ட பொருளாளர் குமரேசன் முன்னாள் எம்.பி.கணேசமூர்த்தி ஆதரவுடன் மாவட்ட செயலாராக முட்டி மோதினார். ஆனால் வைகோவின் ஒரே சாய்ஸ் ரவிச்சந்திரன் என்பதால் குமரேசனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கவில்லை.
மேற்கு மாவட்டம்: சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. ராஜபாளையம் மதிமுக மேற்கு ஒன்றிய செயலாளரான செட்டியார்பட்டி வேல்முருகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்துள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவை மதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கி கட்சி பணிக்காக அவரை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழகத்தில் முதன் முதலில் ராஜபாளையம் மேற்கு ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றி கட்சிக்கு தலைமைக்கு அனுப்பியவர் என்ற பெருமை வேல்முருகனுக்கு இருக்கிறது. மதிமுகவின் சீனியரான இவர் தற்போது துரை வைகோ புண்ணியத்தில் மாவட்டச் செயலாளர் ஆகியுள்ளார். போதிய பண பலம் இல்லாதது இவரது மைனஸ். விருதுநகர் மாவட்டத்தில் 3 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நகர, ஒன்றிய செயலாளர்களாக புதிய நிர்வாகிகள் தேர்வாகியுள்ளனர்.
-கார்த்தி