அரசியல் எழுச்சி மாநாடு! அமித்ஷாவுடன் தேர்தல் ஆலோசனை! என்று அ.தி.மு.க. கூடாரம் சந்தோஷ பரபரப்போடு இருப்பது போல் காணப்பட்டாலும் உள்ளுக்குள் உரசல்கள் உச்சம் தொட்டுள்ளது! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
யாருக்கும் யாருக்கும்?...
அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கும், மாஜி முன்னணி அமைச்சர்களுக்கும் இடையில்தானாம். குறிப்பாக வேலுமணியோடு எடப்பாடியாருக்கு மனக்கசப்பு மந்தகாசமாகி கொண்டிருக்கிறது! என்கிறார்கள்.
காரணம்?....
இது குறித்துப் பேசும் நடுநிலை அதிமுகவினர் “பன்னீர், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை அப்புறப்படுத்திவிட்டு எடப்பாடி பழனிசாமி கழக பொதுச்செயலாளராக முடிசூட்டியதில் மாஜி அமைச்சர்கள் சிலரின் உழைப்பும், தியாகமும், தோள் கொடுப்பும் அசாதாரணமானது.அதில் முக்கியமானவர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி.இருவரையும் எடப்பாடியாரின் இரு கரங்களாகவே கழகத்தினர் நினைக்கிறார்கள்.
என்னதான் மூவருமே கொங்கு மண்டல மண்ணின் மைந்தர்கள், ஒரே சமுதாயத்தினர் என்றாலும் கூட அவர்களுக்குள் இனம் புரியாத ஒரு விரிசல் எப்போதும் உண்டு.ஆனாலும் அதையும் தாண்டி எடப்பாடியாரும் – தங்கமணியும் கூட ‘சொந்தம்’ எனும் பசையால் ஒட்டப்பட்டு விடுகிறார்கள்.ஆனால் எடப்பாடியாருக்கும் வேலுமணிக்கும் இடையில் ஒரு பூசல் புகை எப்போதுமே உண்டு.
மதுரை மாநாடு எடப்பாடியாரை புகழ்ந்தாலும், அதற்கு நிதி உதவி எனும் முதுகெலும்பாய் நின்றது வேலுமணிதான். மாநாட்டில் எடப்பாடியார் படம் பொறித்த டீ ஷர்ட்டை போட்டுக் கொண்டு வேலுமணி ஆடினாலும் கூட அவரது உள் மனதினுள் தனக்கான அங்கீகாரத்தை தேடிக்கொண்டேதான் இருக்கிறார். அதாவது அ.தி.மு.க.வில் நம்பர் 2 நானே! என்பதே வேலுமணியின் நோக்கமும், ஆசையும், எதிர்பார்ப்பும்.இவ்வளவு ஏன் ‘உரிமை கோரலும்’ அதுவே.
எடப்பாடியார் வெளிப்படையாக கட்சியை நிர்வகிக்கிறார், வேலுமணி மறைமுகமாக கட்சிக்குள் லாபி செய்கிறார் என்பதே உண்மை. வேலுமணிக்கு எல்லா கட்சியிலும் முன்னிலை வட்டத்தை சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் உள்ளார்கள். எந்த அசாதரண சூழலிலும் அவரால் கட்சிக்குள் தனி சக்தியாக எழ முடியும், அந்த அளவுக்குதான் தன்னை அவர் தயார் படுத்தி வைத்துள்ளார்! இது எடப்பாடியாருக்கும் தெளிவாக தெரியும்.
இந்நிலையில், மதுரை மாநாடுக்குப் பின் கட்சியில் அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை கொண்டு வர நினைத்தார் வேலுமணி. குறிப்பாக பல மாவட்டங்களில் கட்சி ரீதியில் பிரிப்புகளை செய்து மேலும் சில மாவட்ட செயலாளர்களை புதிதாய் கொண்டு வர முயன்றார். ஆனால் இதை வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கியமான மாஜிக்கள் எதிர்த்து, முட்டுக்கட்டை போட்டுவிட்டனர். காரணம், மாவட்ட செயலாளர்களாக இருக்கும் தங்களின் எல்லை இதன் மூலமாக சுருங்கிடும் அபாயம் இருப்பதால்தான்.
மேலும் புதிய மா.செ.க்கள் அப்படியே எடப்பாடியாரின் அடிவருடிகளாகிவிடுவர்! எனும் பயமும் இவர்களுக்கு உள்ளது. தங்கள் மாவட்டங்களில் அத்தனை நிர்வாகிகளும் முதலில் தங்களின் அடிமைகள் அதன் பின்னரே எடப்பாடியாருக்கு ஆராதனை பாட வேண்டும் என்பது இவர்களின் எண்ணம். இதற்கு பிரச்னை வருமென்றுதான் எடப்பாடியாரின் பிளானுக்கு செக் வைத்தனர்.
இதில் கடுப்பில் இருந்த எடப்பாடியாரை மேலும் அப்செட் செய்யும் விதமாக ஒரு பர்ஷனல் காரியத்தை செய்து வருகிறார் வேலுமணி. அதாவது தனது அண்ணன் அன்பரசனின் மகன் திருமண பத்திரிக்கையை தருகிறேன் பேர்வழி என்று பல மாவட்ட நிர்வாகிகளை அவர் நேரில் சந்திக்க துவங்கியுள்ளார்.இந்த சந்திப்பின் போது வேலுமணி லாவகமான பேச்சின் மூலம் எடப்பாடிக்கு சரிசமமான ஆளுமையாக தன்னை நிரூபிக்க முயல்கிறார் என்று எடப்பாடியாருக்கு ஒரு தகவல் போனதாம்.
இதனால், அழைப்பிதழ் வைக்க வரும் வேலுமணி என்னதான் பேசுகிறார்? என்று உளவு பார்க்க ஒரு டீமை நியமித்துள்ளாரம். இது வேலுமணியின் காதுகளுக்கும் போக, அவர் மர்மமாய் சிரித்துவிட்டு தன் டாஸ்க்கை தொடர்கிறார்.
இன்னும் ஓப்பனா சொல்றதா இருந்தால், கட்சியின் தலைமைக்கு ஒரு நெருக்கடி நிலை என்றால், சட்டென டேக் ஆப் ஆகி அந்த இடத்தில் தான் அமர்வதற்கான சூழலை வேலுமணி உருவாக்கிக் கொண்டிருக்கிறார்னுதான் கட்சிக்குள் பேச்சு. இதனால்தான் எடப்பாடியார் அப்செட்டில் இருக்கிறார்.தனது டெல்லி விசிட்டின் போது பா.ஜ.க. முக்கியஸ்தர்கள் சிலரிடம் இது பற்றி ஓப்பனாவே பேசி, தனது சைடுக்கு வலு சேர்த்திருக்கிறார் அப்படின்னு கட்சிக்குள் பேச்சு” என்று முடித்தனர்.
அதிமுகவின் சட்டமன்ற கொறடாவான வேலுமணியிடம் இது பற்றி பேச முயற்சித்தோம்.அவரது நெருங்கிய கைகளோ “அத்தனையும் கட்டுக்கதைங்ணா. தலைவர் மற்றும் அம்மாவுக்கு நிகராக அண்ணன் எடப்பாடியாரை வேலுமணியண்ணன் தன் மனசுல வெச்சிருக்கார். எடப்பாடியாரை ஒரு நொடி கூட விட்டுத்தரவும் மாட்டார், விட்டு விலகவும் மாட்டார். மீண்டும் அவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்தாமல் ஓயமாட்டார்” என்றார்கள்.
ஒண்ணு இருக்குது ஆனா இல்லை!ங்கிற எஸ்.ஜே.சூர்யாயிஸம்தானே அரசியல்!?
-ஷக்தி