அண்ணாமலைக்கு சவால் விடுகிறாரா வானதி?: பரபரக்கும் பந்தல் பாலிடிக்ஸ்

அண்ணாமலைக்கு சவால் விடுகிறாரா வானதி?: பரபரக்கும் பந்தல் பாலிடிக்ஸ்

தமிழக அரசியல் விமர்சகர் ஒருவரின் அந்த சோஷியல் மீடியா பதிவு கவனம் ஈர்க்கிறது.

”தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் கோலோச்சும் இரண்டு பெரிய திராவிட கட்சிகளின் சிறப்பம்சமான ‘கோஷ்டி அரசியல்’இப்போது பா.ஜ.க.வுக்கும் தொற்றியுள்ளதே. அதிலும் மாநில தலைவருக்கு எதிராகவே ஒரு கோஷ்டி என்பது உண்மையிலேயே கெத்துதான்.

குறிப்பாக பா.ஜ.க-வின் தேசிய மகளிரணி தலைவர் வானதி தன்னை தமிழக பாஜகவின் முக்கிய சக்தியாக நிலைநிறுத்திக்க முயற்சிக்கிறார். தேசிய தலைமையை மட்டுமே வணங்கும் அவர் மாநில தலைமையை தாண்டிய அரசியல் செய்கிறார். குறிப்பாக சமீபத்தில் கோவையில் தன் தெற்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் ‘கோடைக்கால இலவச நீர் மோர் பந்தலை’அவர் திறந்து வைத்தார். அதில், மோடியின் போட்டோ மற்றும் வானதியின் போட்டோ இரண்டும் தான் இருந்ததே தவிர மாநில தலைவரான அண்ணாமலையின் போட்டோ இல்லை. இது அவரது உள்ளரசியல் அதிரடியை காட்டுகிறது.

இது மட்டுமல்ல தமிழகத்தில் அரசியல் நிகழ்வுகளை விமர்சித்தும், கருத்து சொல்லியும் மாநில தலைவருக்கு நிகராக வானதியும் தினமும் அறிக்கை, பேட்டி, கருத்துக்கள் என்று பட்டாஸ் கிளப்புகிறார். அண்மையில் கமல்ஹாசன் தன் நிர்வாகிகளுடனான ஆலோசன கூட்டத்தில் ’கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸை ஆதரித்து பிரசாரம் செய்ய என்னை ராகுல் அழைத்துள்ளார்’என்று பெருமை பொங்க ஒரு தகவலை தெரிவித்தார்.

இதற்கு‘ஊழல்வாத பேச்சாளர்களின் நட்சத்திரப் பேச்சாளர்தான் கமல்’என்று அதிரடியாய் போட்டுத் தாக்கினார் வானதி. இப்படியான பரபரப்புகளின் மூலம் தன்னை தமிழக பா.ஜ.க-வின் முகமாகவே காட்டிக் கொள்கிறார். இதுதான் அண்ணாமலை வட்டாரத்திற்கு எரிச்சலைக் கிளப்பியுள்ளது.

’மாநில தலைவரின் போட்டோ இல்லாமல் பேனர் வைப்பதும், மாநில தலைவருக்கு போட்டியாக அறிக்கை விடுவதும் சரியான முறையில்லை’என்று அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கடுப்பாய் பேச, அதற்கு ’அக்கா அவர்கள் நமது கட்சியின் அகில இந்திய மகளிரணி தலைவர் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று பதிலடி தந்துள்ளனர் வானதியின் ஆதரவாளர்கள்.

தமிழகம் முழுக்கவே அனைத்து மாவட்ட பாஜகவிலும் கோஷ்டி பூசல் உச்சத்தில்தான் உள்ளது. முன்பெல்லாம் லோக்கல் மாவட்ட தலைவர்களுக்குள்தான் மோதல் இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் மாநில தலைவருக்கு வேண்டப்பட்ட டீம், எதிர் டீம் என்று போய்க்கொண்டிருக்கிறது நிலைமை. கோவை மாவட்ட பா.ஜ.க-வை எடுத்துக் கொண்டால் மாநில பொருளாளர் சேகர், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில விவசாய அணி நாகராஜ் இவர்களெல்லாம் அண்ணாமலையின் ஆதரவு டீமாக உள்ளனர். ஆனால், வானதியோ வலுவான எதிரணியாக உள்ளார்.

அண்ணாமலையின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் சில சறுக்கலை தந்துள்ள நிலையில், கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் கட்சியை வெற்றி பெற வைக்காவிட்டால் தமிழகத்தில் மலையின் பதவி காலியாகும் வாய்ப்பு அதிகம் எனும் கருத்து பா.ஜ.க-வினுள்ளேயே கேட்கிறது. இந்த நிலையில் வானதி தன்னை தமிழக பா.ஜ.க-வின் தலைவர் நாற்காலியை நோக்கி உந்தி தள்ளுகிறார் என்பது அவரது நடவடிக்கைகளின் மூலம் புலனாகிறது.

இதை ஸ்மெல் பண்ணிவிட்ட அண்ணாமலையின் டீமோ, ‘கர்நாடக தேர்தல் பணிகளை அமோக வெற்றியுடன் முடிச்சுட்டு அண்ணன் தமிழகத்துக்கு திரும்பட்டும், அப்புறமா இந்த உள்ளடி நபர்களுக்கு அதிரடி பதிலடி தரப்படும்’ என்கிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் போல மிக கடுமையான கோஷ்டி பூசல்களை சந்திப்பதன் மூலமாக தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றி விட்டது என்பது இப்போது புரிகிறதா?’ என்று முடிகிறது அந்த பதிவு. கவனிப்போம்.

-ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com