'வைகோ, தனது மனசாட்சிக்கு பயப்படட்டும்' - திருப்பூர் துரைசாமி பேட்டி

தனது மனசாட்சிக்கு முக்கியத்துவம் தந்து செயல்படட்டும்
'வைகோ, தனது மனசாட்சிக்கு பயப்படட்டும்' - திருப்பூர் துரைசாமி பேட்டி

தி.மு.க.விடம் எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதால் அ.தி.மு.க. பிறந்தது. ஆனால், இன்று வரையில் அது தி.மு.க.வின் எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, எதிரிக்கட்சியாகவும் இருந்து வருகிறது.

இத்தனைக்கும் அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். மறைந்துவிட்டார். அவரிடம் அரசியல் பயின்று பின் கட்சியை கையிலெடுத்து உச்சம் பெற வைத்த ஜெயலலிதாவும் மறைந்துவிட்டார். ஆனாலும், அந்த கட்சி இப்போதும் தி.மு.க. எனும் புயலை எதிர்கொண்டு வலுவாய் நிற்கிறது.

அதே தி.மு.க.விடம் வைகோ நியாயம் கேட்டதால் ம.தி.மு.க. பிறந்தது. ஆனால், மீண்டும் அக்கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைப்பதும், பின் பிரிவதும், பின் மீண்டும் அண்டுவதுமாக இருந்த வைகோவின் கண் எதிரிலேயே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கரைந்து நிற்கிறது. அதுமட்டுமில்லாமல், எந்த வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ கலகம் செய்தாரோ, அதே வாரிசு அரசியலை தன் இயக்கத்தில் ஊக்கிவித்ததன் விளைவாகத்தான் அவர் சரிவை சந்தித்துள்ளார்.

சிகரெட் ஏஜென்ஸி உள்ளிட்ட பிஸ்னஸில் இருந்த தனது மகன் துரை வையாபுரியை திடுதிப்பென சில காலத்துக்கு முன்பாக கட்சியினுள் கொண்டு வந்த வைகோ, அவரை ‘தலைமை நிலையச் செயலராக’ நியமித்ததன் காரணமாக இன்று உட்கட்சிக்குள் மிகப்பெரிய போர்க்கொடியை சந்திக்கிறார். குறிப்பாக பொதுவாழ்வில் வைகோ மிகப்பெரிய நெருக்கடிகளைச் சந்தித்து நின்ற போதெல்லாம் அவருக்கு தோள் தரும் தோழனாக நின்று அரண் அமைத்தவர் ம.தி.மு.க.வின் அவைத் தலைவரான திருப்பூர் துரைசாமி.

இப்போது அவரேதான் வைகோவுக்கு எதிராக முழுமையாக முறுக்கிக் கொண்டு நிற்கிறார். ’ம.தி.மு.க.வை, தி.மு.க.வோடு இணைத்துவிடுங்கள்’ என்று சமீபத்தில் வைகோவுக்கு 6 பக்க அதிர்ச்சி கடிதம் எழுதிய துரைசாமி தற்போது மீண்டும் சில அணுகுண்டுகளை அள்ளிப் போட்டுள்ளார். அதில் ஹைலைட்டாக “எங்கள் கட்சியின் விதிகளின்படி கிளைக்கு நூறு உறுப்பினர்கள் இருந்தால் கிளைத்தேர்தல் நடத்திதான் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், கட்சியின் நிர்வாகமோ போலி ஆதார் அட்டை, விபரங்களை வைத்து பினாமியாக கிளை தேர்தல் நடத்தி, நிர்வாகிகளை தேர்வு செய்து, உறுப்பினர்கள் அதிகமாகிவிட்டதாக கணக்கு காண்பிக்கின்றனர். இந்த நியாயத்தை பேசினால் அதற்கு விளக்கம் கொடுக்காமல் எங்கள் மீது குழப்பவாதி என பழி போடுகிறார்கள்.

என் பெயரில் எந்த சங்கமும் இல்லை. என்னால் எந்த சொத்தையும் அபகரிக்க முடியாது. ஆனால், கட்சியின் பொருளாளர் கட்சியின் காசோலைகளில் கையெழுத்திட முடியாது. கட்சியின் வரவு செலவு, கையிருப்பு, சொத்து மதிப்பு எல்லாமே வைகோவுக்குதான் தெரியும். இதுதான் ஜனநாயகமா?” என்று விளாசினார்.

திருப்பூரில் துரைசாமி விளாசிக் கொண்டிருந்த நேரத்தில் சென்னையில் ம.தி.மு.க.வின் அலுவலகமான தாயகத்தில் வைகோ ஒரு பேட்டியளித்தார். அதில் ‘கட்சியில் குழப்பம் விளைவிக்க முயற்சித்து தோல்வியை கண்டுவிட்டார் துரைசாமி. இனி நான் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதில்லை” என்று பொளேரென தாக்கினார். இந்த நிலையில் நாம் திருப்பூர் துரைசாமியிடம் சில கேள்விகளை வைத்தோம்.

திருப்பூர் துரைசாமியின் கோரிக்கையை அலட்சியம் செய்கிறேன், நிராகரிக்கிறேன்! என்கிறாரே வைகோ? ‘’அவர் என்னை நிராகரிக்கவோ, அலட்சியம் செய்யவோ முடியாது. ‘தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைத்துவிடுங்கள்’என்று நான் எழுப்பிய கோரிக்கையை நிராகரிக்கிறாராம்.

தி.மு.க.வுடன் இணைக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை. ஆனால் துரைசாமிக்குதான் அந்த உள்நோக்கம் உள்ளது என்கிறாரே!?

’’கழகத்தில் ஜனநாயகத்தை வலியுறுத்தும் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. தியாக இயக்கம் என பெயரெடுத்த ம.தி.மு.க.வை வாரிசுக்கான கட்சியாக மாற்றிய அவரிடம்தான் உள்நோக்கம் உள்ளது என்பது கடைசி தொண்டனுக்கும் தெரியும்.

ஆனாலும், வைகோ மீது நீங்கள் அதிக பாரமான குற்றச்சாட்டை வைக்கிறீர்களோ?

’’நிச்சயமாக இல்லை. ம.தி.மு.க. என்றுமே தனித்தன்மையுடன் இயங்க வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாக கொண்ட என் போன்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் மனபாரத்தை பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவர்தான் செயல்படுகிறார். அதை சுட்டிக்காட்டினால் ‘சொத்துக்களை அபகரிக்க குழப்பம் செய்கிறேன்’என்கிறார். வைகோவிடமிருந்து இவ்வளவு சாதாரண சமாளிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இயக்கத்துக்காக பல பதவிகளை மறுதலித்த தியாகி! என்பார்கள், அவரை இப்படி விமர்சிப்பது சரியா?

’’அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். தியாகத்துக்காகவும், லட்சியத்துக்காகவும் துவங்கப்பட்ட இயக்கம்தான் ம.தி.மு.க. அதன் நோக்கத்தை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு வாரிசு அரசியலை ஊக்குவிப்பதை எப்படி ஏற்க முடியும்? இந்த இயக்கம் தலை நிமிர்ந்து நிற்க உயிரையும், வாழ்வையும் அர்ப்பணித்தோர் ஏராளம். கணேசமூர்த்தி, மல்லை சத்யா உள்ளிட்ட பலர் வைகோவுக்காகவும், கழகத்துக்காகவும் தங்களை தத்துக்கொடுத்தவர்கள். அவர்களை விட்டுட்டு தன் மகனுக்கு பதவி கொடுப்பதைத்தான் தவறு என்கிறோம்.

திருப்பூர் துரைசாமிக்கு இனி முக்கியத்துவம் தரப்போவதில்லை! என்கிறாரேட் வைகோ?

’’அவரது இந்த முடிவில் ஆச்சரியமோ, அதிர்ச்சியோ இல்லை. கழக எழுச்சிக்காக கூடவே நின்று வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கு அவர் முக்கியத்துவம் தருவதில்லை என்பதைதான் அவரது சுயநல செயற்பாடுகள் காட்டுகிறதே. அவர் எங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டாம். தனது மனசாட்சிக்கு முக்கியத்துவம் தந்து செயல்படட்டும்’’.

இனி அடுத்து?

’’காலம் முடிவு செய்யும். தொண்டர்களின் தியாகத்துக்கு நிச்சயம் மதிப்பு கிடைக்கும்’’என முடித்தார்.

-ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com