திருச்சி: ’ஏழை மக்கள் என்கிற அலட்சியமா?’-நகராட்சி குப்பை அள்ளும் லாரியில் அம்மா உணவகத்துக்கு வந்த அரிசி
‘ஏழைகளின் பசி தீர்க்கும் மிகச் சிறந்த திட்டம்’ என்ற முழக்கத்துடன் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது, அம்மா உணவகம். பெரும் வரவேற்பு கிடைத்ததால், தமிழகம் முழுவதும் பல நகரங்களிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு வரவேற்பை பெற்றன. பல மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த அம்மா உணவகம் வெவ்வேறு பெயர்களில் திறக்கப்பட்டன. எகிப்திலிருந்து பொருளாதார நிபுணர்கள் வந்து பார்த்து வியந்தார்கள்.
அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாமல், மேன்ஷனில் தங்கி வேலை பார்க்கும் பேச்சுலர்களும் அம்மா உணவகத்தைத் தேடி வந்தனர். தினமும் அலைந்து திரிந்து பணிபுரியும் மார்க்கெட்டிங் ஆட்களுக்கும் வயிற்றைக் கெடுக்காத மலிவு விலை உணவு கிடைத்தது. வெறும் 32 ரூபாய் இருந்தால், மூன்று வேளையும் தரமான உணவை இங்கே சாப்பிடலாம் என்ற நம்பிக்கை எழுந்தது. ஒவ்வொரு நாளும் நான்கு லட்சம் பேரின் பசியைத் தீர்த்தபடி பரபரப்பாகச் செயல்பட்டன இந்த உணவகங்கள்.
அப்படி பெருமைப்பட்ட அம்மா உணவகத்தில் ஒரு அவல நிலைச் சம்பவமும் திருச்சியில் அரங்கேறி இருக்கிறது. திருச்சியில் நடைதிருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்திற்கு குப்பை அள்ளும் வண்டியில் அரிசி மூட்டைகள் வந்திறங்கியதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏழை மக்கள் தானே எதைக் கொண்டு வந்து எப்படி போட்டாலும் தின்றுவிட்டு போகட்டும் என்று நினைத்த துறையூர் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனம் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் குப்பை லாரியில் இருந்து அரிசி மூட்டைகள் இறக்கப்படும் படம் வைரலாக பரவியதை அடுத்து துறையூர் நகராட்சி சேர்மன் திமுகவைச் சேர்ந்த செல்வராணியிடம் கேட்டபோது, "அரிசி கிடைக்காமல் இரண்டு நாட்களாக அங்கும், இங்கும் அல்லாடி சேகரித்து தனியார் லாரியை பிடித்து கொண்டு போங்கள் என்று சொல்லி வாடகை கொடுத்து தான் அனுப்பினேன். அவர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. நான் விசாரிக்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.
- ஷானு