அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி உறையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், 'மாற்றத்தை நோக்கி' என்ற தலைப்பில் நடைபயண இயக்கம் இன்று தொடங்கப்பட்டது. இந்த நடை பயணத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பா.ஜ.க அரசால் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
ஒரு மசோதாவை நிறைவேற்றிய பின்னர் எந்த ஒரு அரசும் அதை திரும்பப் பெறாது. ஆனால் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை நேர சட்டத்தை நிறைவேற்றியதால், அதற்கு எதிர்ப்பு வந்தவுடன் தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுள்ளது. இதுதான் சிறந்த ஜனநாயக அரசு.
ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் ஜனநாயகத்திற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். குறிப்பாக, சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆளுநர் உரையில் இருந்தது அனைத்தும் தவறு என்கிறார். அந்த உரை அரசின் சார்பில் தரப்படுகிறது. அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அவர் ஒப்புதல் அளித்த பின்னரே அச்சிடப்படும்.
எனவே அது சட்டப்பேரவை உறுப்பினர்களின் உரிமை. அப்படி இருக்கையில், அந்த உரையில் இருந்த அனைத்தும் தவறு என அவர் கூறியிருப்பது கண்டனத்திற்கு உரியது. ஆளுநராக பொறுப்பேற்பவர் உறுதிமொழி ஏற்றுதான் பொறுப்பேற்கிறார். அந்த உறுதிமொழிக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிக் கொண்டிருக்கிறார். செயல்பட்டு வருகிறார்' என குற்றம்சாட்டினார்.