வருமானத்திற்கு அதிகமாக ரூ.127 கோடி சொத்துக்குவிப்பு: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

டாக்டர் மோகனின் வீட்டில் தண்ணீர் தொட்டி, பாத்ரூம், கார் என ஒன்றையும் விடாமல் சோதனை நடத்தியது.
ஆர்.காமராஜ்
ஆர்.காமராஜ்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஆறு பேர் மீது திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.காமராஜ். இவர் கடந்த 2015 முதல் 2021 வரை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் முறைகேடாக அவர் பெயரிலும், அவரது மகன்களான டாக்டர் இனியன், இன்பன் மற்றும் நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து வருமானத்திற்கு அதிகமாக சுமார் 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக திருவாரூர் ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை போலீஸார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து மன்னார்குடியில் உள்ள ஆர்.காமராஜ் வீடு, தஞ்சாவூர் பூக்கார வஸ்தா தெருவில் உள்ள அவரது சம்பந்தி டாக்டர் மோகன், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை என தமிழகம் முழுவதும் 51 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது டாக்டர் மோகனின் வீட்டில் தண்ணீர் தொட்டி, பாத்ரூம், கார் என ஒன்றையும் விடாமல் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஊழல் தடுப்பு போலீஸார் நடத்திய சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப் படவில்லை என அப்போது ஆர்.காமராஜ் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 127 கோடியே 49 லட்சம் சொத்து சேர்த்திருப்பதாக கூறி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸார் திருவாரூர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாரிடம் பேசினோம். ‘’ஆர்.காமராஜ் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அவரது நண்பர்களான சந்திரஹாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோரை கூட்டு சேர்த்துக் கொண்டு நார்க் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற பினாமி பெயரில் இடத்தை வாங்கி, அதில் அவரது மகன்களான இனியன், இன்பன் பெயரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்க சென்டர் என்கிற பன்னோக்கு மருத்துவமனை கட்டியுள்ளார்.

இதன் மூலமும் இதர வகையிலும் ரூ.127 கோடியே 49 லட்சம் 9 ஆயிரத்து 85 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ஆர்.காமராஜ், அவரது மகன்கள் உள்ளிட்ட ஆறு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறோம்’’ என்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com