பல ஆண்டுகளாகக் காத்திருந்த பொது மக்கள்- ரயில்வே நிர்வாகம் உற்சாக அறிவிப்பு

செங்கோட்டை பாஸஞ்சர், ஜனதா எக்ஸ்பிரஸ் என பல இரயில்கள் இயக்கப்படாமலே அப்படியே கிடப்பில் போட்டப்பட்டுவிட்டது.
சீர்காழி ரயில் நிலையம்
சீர்காழி ரயில் நிலையம்

கொரோனா நோய் தொற்று காலம் முதல் பல ஆண்டுகளாக சீர்காழி ரயில்நிலையத்தில் நிற்காமல் சென்ற ரயில்கள் வரும் 18ம்தேதி முதல் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில் நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று சென்று கொண்டிருந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காலத்தில் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ‘ஜீரோ ஹவர்ஸ்’என்ற அறிவிப்பின்படி அந்த நேரத்தில் செல்லும் ரயில்கள் எதுவும் நிற்காமல் சென்றது. இந்த அறிவிப்பானது கொரோனா நோய் தொற்று முடிந்த பின்னர் திரும்பப்பெறப்பட்டு பின்னர் வழக்கம்போல் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், கொரோனா நோய் தொற்று முடிந்து சகஜ நிலை திரும்பிய பின்னரும் அந்த அறிவிப்பு திரும்பப்பெறப்படாமல் இரவு 12 மணிக்கு மேல் சீர்காழி வழியே செல்லும் அனைத்து ரயில்களும் நிற்காமலே சென்று கொண்டிருந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “சென்னை செல்லும் பல ரயில்கள் இரவு 12 மணிக்கு மேல்தான் சீர்காழி ரயில்நிலையத்திற்கு வருகிறது. இதில் 12 மணிக்குள் வரும் உழவன் எக்ஸ்பிரஸ், காரைக்கால் எக்ஸ்பிரஸ் இரண்டு ரயில் மட்டுமே சீர்காழியில் நின்று சென்றுகொண்டிருந்தது. அதன் பின்னர் வரும் நான்கு ரயில்களும் நிற்காமலே சென்றது. அதேபோல் சென்னைக்கு செல்லும் போது நின்று சென்ற மேற்படி இரண்டு ரயில்களும் திரும்ப வரும்போது சீர்காழியில் நிற்பதில்லை. இதனால் தலைநகரான சென்னை செல்வதற்கும் அங்கிருந்து ஊர் திரும்புவதற்கும் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயிலான அந்தியோதயாவும், மதுரை மஹால் எக்ஸ்பிரஸும் சீர்காழியில் நிற்பதில்லை. இந்நிலையில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த செங்கோட்டை பாஸஞ்சர், ஜனதா எக்ஸ்பிரஸ் என பல இரயில்கள் இயக்கப்படாமலே அப்படியே கிடப்பில் போட்டப்பட்டுவிட்டது.

இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கொள்ளை லாபம் சம்பாதித்தனர். அரசு பேருந்துகள் பை-பாஸ் சாலையிலேயே நின்று பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிடுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆட்பட்டனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆதரவுடன் ரயில் உபயோகிப்பாளர் சங்கம், மற்றும் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடந்து போராட்டங்களை நடத்திவந்தனர். எதற்கும் ரயில்வே நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் நுகர்வோர் அமைப்பின் மாநில தலைவர் ஜெக.சண்முகம்,‘தண்டவாளத்தில் தலைவைத்து ரயிலை நிறுத்தும் போராட்டம்’ஒன்றை அதிரடியாக அறிவித்தார். முன்கூட்டியே தேதியை அறிவித்தால் அதிகாரிகள் சமாதானக்கூட்டம் என்றபடி அந்த சமயத்திற்கு மட்டும் சமாதானப்படுத்தி மக்களை ஏமாற்றிவிடுகின்றனர். எனவே போராட்ட தினத்திற்கு முதல்நாள் இரவு 12 மணியளவில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உடனே போராட்டம் நடைபெறும்’என்ற அறிவிப்பிற்கு அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பும் கிடைத்தது. இந்த போராட்ட அறிவிப்பால் அதிகாரிகள் அதிர்ந்துபோய் விட்டனர். இந்நிலையில்தான் ரயில்வே நிர்வாகம் முக்கிய 5 ரயில்களை சீர்காழியில் நிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது”என்றனர்.

அத்துடன் ரயில்கள் நிற்பதற்கு பெருமுயற்சி எடுத்து பொதுமக்களுக்கு ஆதரவாக இருந்த சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

இது குறித்து சீர்காழி தி.மு.க எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், “கொரோனா காலத்தில் ஒருவழி மார்க்கமாக நின்று சென்றுகொண்டிருந்த 5 ரயில்கள் இரு வழி மார்க்கமாக நின்று செல்வதற்கு பல்வேறு தரப்பினர் போராடிவந்தனர். அவர்களுக்கு ஆதரவாக நானும், எங்கள் கட்சியின் எம்.பி ராமலிங்கமும் திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனுக்கள் அளித்தோம். இந்நிலையில் மேற்படி 5 ரயில்களும் சீர்காழியில் வரும் 18ம் தேதி முதல் நின்று செல்லும் என்று ரயில்வே மேலாளர் ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தற்போது நிற்காமல் சென்று கொண்டிருக்கும் அந்தியோதயா ரயிலும் விரைவில் நின்று செல்லும் என்றும் அறிவித்துள்ளனர். பல ஆண்டுகள் போராட்டங்களுக்கு இப்போதுதான் ஒரு தீர்வு கிடைத்துள்ளது”என்றார்.

இதற்கிடையே பொதுமக்கள் சீர்காழி ரயில்நிலையம் தொடர்பாக சில முக்கிய பிரச்னைகளையும் கூறினர். “சீர்காழி ரயில் நிலையம் ஒரு முக்கிய ரயில்நிலையமாக இருந்தாலும் எந்த ஒரு வசதியும் இல்லை. பயணிகள் காத்திருக்கும் அறையை போலீசார் ஆக்கிரமித்து அவர்களது சொந்த அறையாக்கிக்கொண்டு பூட்டி வைத்துக்கொள்கின்றனர். ரயில்நிலையத்தில் குடிநீர் குழாய்கள் ஒன்று கூட இல்லை. ரயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தபோது அவசர அவசரமாக குடிநீர் குழாய்கள் அமைத்தனர். மறுநாளே அந்த குடிநீர் குழாய்கள் அனைத்தும் மாயமாகிப்போய்விட்டது. கழிப்பறையோ கட்டப்பட்ட தினத்திலிருந்து 5 ஆண்டுகளாக ஒரு நாள்கூட திறந்ததே இல்லை. ‘கோச் பொஸிஸன்’ எனப்படும் ரயில்பெட்டிகள் சரியாக எந்த இடத்தில் நிறுத்தப்படும் என்பதற்காக அறிவிப்பு விளக்குகள் ரயில்நிலையத்தில் பொருத்தப்பட்டது. என்ன காரணத்தினாலோ அன்று மாலையே அவைகள் அனைத்தும் அகற்றப்பட்டதுதான் கொடுமையிலும் கொடுமை. இதற்கும் விரைவில் போராடவிருக்கிறோம். போராட்டமே எங்கள் வாழ்க்கையாகிவிட்டது.” என்றனர் சோகத்துடன்.

இது ரயில்வே அதிகாரிகளிடம் பேசியபோது, ‘விரைவில் ரயில் நிலைய பிரச்னைகள் சரி செய்யப்படும்’ என்றனர் பெயரை தவிர்த்தபடி.

-ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com