'தமிழக ஆளுநருக்கு அறிவுரை வழங்கவேண்டும்' - குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக உள்ளது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தகுந்த அறிவுரை வழங்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீது ஏராளமான புகார்களை மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19 பக்க புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில், மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் உள்ளதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

ஆனால், பெயரளவில் மாநிலத்தின் தலைவரான ஆளுநர், தனது அதிகாரத்தை மாநில முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படியே செயல்படுத்த வேண்டும்.

ஆளுநர் என்பவர், முக்கியமான அரசியலமைப்பு கடமைகளைச் செய்பவராகவும், பாரபட்சமற்றவராகவும், அப்பழுக்கற்ற நேர்மையான நபராகவும் இருக்க வேண்டும்.

மக்களாட்சி தத்துவம் என்பது நமது அரசியல் சாசனத்தின் உயிர்நாடி என்றும், அந்த மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை நிறுவுவதற்காகவே, நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் காலனிய சக்திகளை எதிர்த்துப் போராடி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

அரசியல் சாசனத்தின் மீதும், அது பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் மீதும் ஆளுநருக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அரசியலமைப்பின் இலட்சியங்கள் முகவுரையில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு என்றும், இந்த அடிப்படைக் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை இல்லாத ஆளுநர், அரசியலமைப்பு பதவியை வகிக்கத் தகுதியற்றவர்.

அரசியல்வாதியாக மாறும் ஒரு ஆளுநர், அப்பதவியில் தொடரவே கூடாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை, செயல்பாடுகள், முடிவுகளுக்கு சவால் விடும் வகையில் ஆளுநர் செயல்பாடு உள்ளது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் கொள்கைக்கு ஆளுநர் வெளிப்படையாகவே முரண்படுகிரார். சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் தேவையற்ற காலதாமதம் செய்து வருகிறார்.

கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை போன்ற அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களுக்கு எதிராகச் செயல்படுகிறார். இதுபோன்ற சூழ்நிலையை அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டலாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆர்.என்.ரவியின் செயல்பாடு தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக உள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com