’மக்களின் இதயங்களில் குடியிருக்கிறோம்’- மம்தா பானர்ஜி பெருமிதம்
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கிராமப்புற தேர்தல்களில் பெரும் முன்னிலை பெற்றதையடுத்து பா.ஜ.க இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
மேற்கு வங்காளத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு, அதன் நெருங்கிய போட்டியாளரான பா.ஜ.க-வை விட மாபெரும் முன்னிலை பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவடைவதற்கு நீண்ட தூரம் உள்ள போதிலும், மாநிலம் முழுவதும் உள்ள திரிணாமுல் அலுவலகங்களில் பச்சை குலால் மற்றும் இனிப்புடன் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
"கிராமப்புற வங்காளத்தில் அனைத்து வழிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ’’திரிணாமும் காங்கிரஸ் மீதான மக்களின் அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாநில மக்களின் இதயத்தில் திரிணாமும் காங்கிரஸ் மட்டுமே உள்ளது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது" என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தலின் 74,000 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. 63,229 கிராம பஞ்சாயத்து இடங்கள் தவிர, 9,730 பஞ்சாயத்து மற்றும் 928 மாவட்டபஞ்சாயத்து இடங்களும் இதில் அடங்கும்.
மாநில தேர்தல் ஆணையத்தின் தரவுகள் கிராம பஞ்சாயத்து தொகுதிகளில் 23,198 இடங்களில் திரிணாமுல் முன்னிலை வகிக்கிறது, பா.ஜ.க 5,756 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2,048 இடங்களிலும், காங்கிரஸ் 1,439 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட ISF உள்ளிட்ட பிற கட்சிகள் 1,721 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கிளர்ச்சியாளர்களை உள்ளடக்கிய சுயேச்சைகள் 718 இடங்களில் வெற்றி பெற்று 216 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.
திங்கட்கிழமை வாக்குப்பதிவு பல சாவடிகளில் வன்முறைகள் நிகழ்ந்தன. இதில் 15 பேர் இறந்தனர். வாக்குப்பெட்டியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாருக்கு மத்தியில் நேற்று 696 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை, முர்ஷிதாபாத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையம் அருகே கச்சா குண்டுகள் வீசப்பட்டன. மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஹவுராவில் போலீசார் தடியடி நடத்தினர்.
எனினும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் ஆயுதம் ஏந்திய மாநில காவல்துறையினரும், மத்தியப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் சிஆர்பிசியின் 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் எதிரணி முகவர்களைத் தடுப்பதன் மூலம் திரிணாமுல் கட்சி வாக்குகளைக் கொள்ளையடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது.
"திரிணாமுல் குண்டர்கள் வாக்கு எண்ணும் முகவர்கள், பா.ஜ.க மற்றும் இதர எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களை வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைய விடாமல் தடுப்பதன் மூலம் தேர்தலில் முறைகேடு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் இடம் நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் முகவர்களை மிரட்டி வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன" என்று எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
திரிணாமுல் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், ’’தோல்வியை உணர்ந்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். மக்களால் நிராகரிக்கப்பட்டு, அவமானகரமான தோல்வியை உணர்ந்து, பா.ஜ.க தனது சொந்த தோல்விகளை ஈடுசெய்ய நொண்டிச் சாக்குகளைக் கொண்டு வரும் கடைசி முயற்சி" என்று அவர் கூறினார்.