'திரௌபதி அம்மன் கோயிலை பூட்டியவர்கள், சிதம்பரம் நடராஜர் கோயிலை பூட்ட முடியுமா?' - சீமான் கேள்வி

நடைமுறையில் இல்லாத, பொது சிவில் சட்டத்தை கொண்டுவர பா.ஜ.கவினர் முயற்சி செய்து வருகிறார்கள் என சீமான் புகார்
சீமான்
சீமான்

'எளிய மக்கள் வழிபடும் கோயில் என்பதால் திரௌபதி அம்மன் கோயிலை பூட்டினார்கள், பிரச்சனை முடியும் வரை சிதம்பரம் நடராஜர் கோயில் கோயிலை பூட்ட முடியுமா?' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பொது சிவில் சட்டம் இதுவரை நடைமுறையில் இல்லை. இப்போது புதிதாக கொண்டுவர பா.ஜ.கவினர் முயற்சி செய்து வருகிறார்கள்.

குறிப்பாக, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு உரிய சட்ட முறையை தகர்க்க வேண்டும். புது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றால், ராணுவத்திற்கு சேரும்போது நான் தாடியை எடுத்துக்கொண்டு சேர்வேன், சீக்கியர்களை தலப்பாைைகையும், தாடியும் எடுத்து வரச்சொல்ல முடியுமா? இதெல்லாம் திசை திருப்பும் முயற்சி.

நாட்டில், விலைவாசி உயர்ந்துள்ளது, கல்வி, மருத்துவம், போக்குவரத்து எதிலும் அடிப்படை கட்டமைப்பு இல்லை. ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று மோடி சொன்னார். அப்ப இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள் என்றுதானே அர்த்தம்.

10 ஆண்டுகளில் எத்தனை கோடி பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள். விலைவாசி ஏறியது குறித்து நிதி அமைச்சரிடம் கேட்டால் ராமர் கோயில் கட்டியவுடன் குறைந்து விடும் என்கிறார். சாதாரண மனநிலையில்தான் அவர் பேசுகிறாரா என்று தெரியவில்லை.

இந்த சட்டத்தைக் கொண்டு வந்தால் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு மேலோங்கிவிடுமா? அல்லது மற்றநாடுகளைவிட நமது நாடு வளர்ந்து விடுமா? பெண்களுக்கு சம உரிமை உள்ளதா?

நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்த் மரத்தடியில் அமர்ந்து யாகம் வளர்த்தார். நாட்டின் முதல் குடிமகள் திரௌபதி முர்முவை கட்டையை போட்டு வெளியே நிறுத்தி உள்ளார்கள். சட்டத்திற்கு முன்பு சமம் இல்லை என்கிறபோது எதற்கு இந்த சட்டம்?

செந்தில் பாலாஜி விவகாரத்தை பொறுத்தவரை ஒரே வழக்கு, 2 நீதிபதிகள் வேறுவேறு தீர்ப்பு சொல்லியுள்ளனர். இன்னொரு நீதிபதி இருந்திருந்தால் வேறு ஒரு தீர்ப்பு வந்திருக்கும். இரண்டு பேர் அமர்வு என்பதால் 2 தீர்ப்பு வந்துள்ளது.

ஒரு வழக்கை எடுத்துக் கொண்டால் கீழமை நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு, உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வரும். இதை பார்த்தால் குழம்பி விடுவோம். சட்டம் சமம் என்பதே இல்லை. ஒரு நாட்டில் ஒரு வழக்குக்கு ஒரு தீர்ப்பு தான் இருக்க வேண்டும்.

சென்னையில் 3 வயது குழந்தையின் கை சிகிச்சையில் பறிபோனது ஒரு பெரும் துயரம். இந்த விவகாரம் வெளியில் தெரிந்து விட்டது, ஆனால் பல குழந்தைகள் விவகாரம் சத்தம் இல்லாமல் மறைந்துள்ளது. அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தவறான சிகிச்சை என்று ஒத்துக்கொண்டு, இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 2 கையுடன் வந்த குழந்தையை மாற்றுத்திறனாளியாக மாற்றி தாயிடம் கொடுத்துள்ளார்கள். இதற்கு அரசு கூறும் பதில் ஏற்புடையதாக இல்லை.

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில், என் இறைவனுக்கு முன்பாக, என் கோயிலுக்கு முன்பாக ஆக்கிரமித்துக் கொண்டு என் தாய் மொழியில் வழிபடவிடாமல் செய்கிறார்கள்.

திரௌபதி அம்மன் கோயிலில் பூட்டை போட்டவர்கள், இதற்கு பூட்டு போட முடியவில்லை. பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று நினைக்கவில்லை. இதை ஒரு கொடுமையாக நான் பார்க்கிறேன். தமிழினத்தின் இயலாமையை காட்டுகிறது. அதிகாரத்தினுடைய வலிமையற்ற தன்மையை காட்டுகிறது.

ஏழை, எளிய மக்கள் வழிபடும் கோயில் என்பதால் திரௌபதி அம்மன் கோயிலை பூட்டினார்கள், பிரச்னை முடியும் வரை சிதம்பரம் நடராஜர் கோயில் கோயிலை பூட்ட முடியுமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com