தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் இருக்கும் வீரசக்க தேவி ஆலயத் திருவிழா இன்று தொடங்கி இரண்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இது வீரசக்கதேவி ஆலயத்தின் 67 வது ஆண்டு சித்திரை திருவிழா ஆகும்.
திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்டபொம்மன் வம்சாவழியினரால் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டப் பேரணியாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்தநிலையில், இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டப் பேரணிக்கு காவல்துறை ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறி, இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெற இருந்த பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா தற்போது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். திருவிழா ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் கோவில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு வீர சக்கதேவி பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தொடர் ஓட்டப் பேரணிக்கு தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் கூறி இருந்தாலும், கோவில் நிர்வாகத்துடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.