தூத்துக்குடி: பா.ஜ.க-வுக்கு போட்டியாக வாட்ஸ் அப் எண் வெளியிட்ட மேயர் - என்ன காரணம்?

போஸ்டர்
போஸ்டர்

தூத்துக்குடியில் பா.ஜ.க-வுக்கு போட்டியாக தி.மு.க-வைச் சேர்ந்த மேயர் மக்கள் குறை தீர்க்கும் வகையில் வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "தூத்துக்குடி மாநகர மக்களுக்கு வணக்கம்.

நான், தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பதவியேற்ற ஓராண்டில் மாநகராட்சிக்குட்பட்ட 50 சதவீத பகுதிகளுக்கு சாலை போடப்பட்டுவிட்டது. வடிகால் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை காலத்திலும் சீரான குடிநீர் வழங்கப்படுகின்றது.

மேலும், சீர்மிகு நகரமாகவும் சிறந்த மாநகராட்சியாகவும் மாற்றிட மக்களாகிய உங்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, உங்களின் நல்ல கருத்துக்களையும் குறைகளை 73977 31065 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் தெரிவிக்கலாம். மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

"இது மாநகராட்சி நிர்வாகத்தின் தவறுகளை மூடி மறைக்கும் செயல்" என்கிறார்கள் எதிர்க்கட்சிகளை சார்ந்தவர்கள். குறிப்பாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க துணைத் தலைவரும், வக்கீலுமான வாரியர், சமீபத்தில் ஊர் முழுக்க ஒரு போஸ்டர் ஒட்டு இருந்தார்.

அதில் "தூத்துக்குடி சட்டமன்ற பொதுமக்கள் தங்கள் குறைகளை எங்களிடம் சொன்னால் நாங்கள் அதை அதிகாரியிடம் எடுத்துச் சென்று நிவர்த்தி செய்கிறோம்" என்று சொல்லி தொடர்பு என்னையும் வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த பிறகு மேயர் இவ்வாறு செய்கிறார் என்கிறார்கள்.

இது பற்றி வக்கீல் வாரியரிடம் கேட்டோம்... "இன்றைய நிலையில் அரசு அதிகாரிகளை அணுகி பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வது என்பது முடியாத காரியமாக இருக்கிறது. அரசு அதிகாரிகள் சம்பளம் வாங்குவதையே மறந்து விட்டு மன்னர் போல் செயல்படுகிறார்கள்.

அதனால்தான், மக்கள் பிரச்சனையை நாமே தீர்த்து வைப்போம் என்று போஸ்டர் ஒட்டினேன். அந்த போஸ்டரை கூட மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்று ஆளுங்கட்சியினர் கிழித்து வருகிறார்கள். ஆனாலும் நாங்கள் மக்கள் குறைகள் கேட்பதை நிறுத்தப் போவதில்லை" என்றார்

மேயர் ஜெகன் பெரியசாமி இடம் கேட்டோம் "நாங்கள் மேயராக பதவி ஏற்ற உடன் முதலமைச்சர் எங்களுக்கு இட்ட ஆணை, எவ்வளவு வேகமாக செயல்பட முடியுமோ அவ்வளவு வேகமாக செயல்படுங்கள். அரசு திட்டங்களை வேகமாக செயல்படுத்துங்கள். அதற்குப் பிறகு மக்களிடம் குறைகளை கேளுங்கள்" என்றார்.

அதன்படி வேகமாக செயல்பட்டோம் தூத்துக்குடி மாநகராட்சியில் 50 சதவீத பணிகளை முடித்து விட்டோம். இப்போது மக்களிடம் குறைகளை கேட்கிறோம். மக்கள் குறைகளை விரைந்து முடிக்க தயாராக இருக்கிறோம்.

எனவே, இது யாரையும் பார்த்து காப்பி அடிக்கும் முயற்சி அல்ல. முழுக்க முழுக்க முதலமைச்சரின் ஆலோசனைப்படி செய்யும் செயல்" என்றார்.

- எஸ்.அண்ணாதுரை

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com