திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையையொட்டிய வெலதிகமணிபெண்டா, கோரிபாளையம், மாதகடப்பா ஆகிய பகுதிகளில் கள்ளாச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுவதாக திருப்பத்தூர் எஸ்.பி.பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இங்கு ரெய்டுக்கு ஆந்திர போலிசார் வரும்பொழுது சாராயம் காய்ச்சுபவர்கள் தமிழக எல்லையிலும், தமிழக போலீசார் வரும்பொழுது ஆந்திர எல்லையிலும் சாராயம் தப்பியோடி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தனர். இந்த தகவல் அறிந்த எஸ்.பி. பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் கலால் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் அதிரடியாக வனத்திற்குள் நுழைந்து பிடிக்க உத்தரவிட்டார்.
பூமியில் குட்டைகள் தோண்டி அதில் மிகப்பெரிய பலிதீன் விரிப்புகளை போட்டு அதில் சாராய ஊறல்கள் போட்டு வைத்திருந்ததை பார்த்து போலீசாரே அதிர்ந்து போயினர். சாராய அடுப்புகள், பேரல்கள், ஊறல்கள் என கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் லிட்டர் சாராயத்தை கொட்டி அழித்தனர்.
சாராயத்தை அழித்த போலீசார் காய்ச்சுபவர்களை பிடிக்க முடியாமல் அவர்கள் தப்பிப்போக காரணம் போலீசுக்குள் இருக்கும் யாரோ ஒருவர் கொடுத்த ரகசிய தகவல் தான் என்று கூறப்படுகிறது.
-அன்பு வேலாயுதம்