'கொலை மிரட்டல் விடுகிறார்கள்' - அலறும் தி.மு.க பெண் கவுன்சிலர்கள் - என்ன நடந்தது?

எங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை என பெண் கவுன்சிலர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்
பாேராட்டத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்கள்
பாேராட்டத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்கள்

நெல்லை மத்திய மாவட்டச் செயலாளராயிருந்த அப்துல் வஹாப் எம்.எல்.ஏவுக்கும், மேயர் சரவணனுக்கும் ஏற்பட்ட மோதலினால் மாமன்ற கூட்டம் அடிக்கடி ரத்து செய்யப்பட்டது.

இதனால், டென்சனான முதல்வர் ஸ்டாலின் அப்துல் வஹாப்பை அழைத்து கண்டித்தார். ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால், அவரது மத்திய மாவட்டச் செயலாளர் பதவியை பிடுங்கினார் என்றாலும், அப்துல் வஹாப் சும்மா இருக்கவில்லை என்பது கடந்த 27 -ம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அவரது ஆதரவு கவுன்சிலர்கள் செய்த ரகளையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

இது குறித்து தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர் நம்மிடம் கூறுகையில், நெல்லை மாநகராட்சியில் வரிவிதிப்பு மேம் முறையீட்டுக்குழு தேர்தல் நடைபெற்றது. இதற்கான மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம் மைதின்கான் 9 பேர்களின் லிஸ்டை சொல்லி, இவர்களுக்குத்தான் தி.மு.க கவுன்சிலர்கள் ஓட்டு போட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால், அப்துல் வஹாப் ஆதரவு கவுன்சிலர்கள் கூடுதலாய் மூன்று பேரை களத்தில் இறக்கி வெற்றி பெற வைத்தனர். மாவட்டச் செயலாளர் சொன்ன மூன்று பேர் தோற்கடிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அப்துல் வஹாப் ஆதரவு பெண் மண்டல தலைவர்கள் மகேஸ்வரி, ரேவதி, கதிஜா ஆகியோர் தங்களுக்கு மத்திய மாவட்டச் செயலாளர் மைதின்கான் கொலை மிரட்டல் விடுத்தார்.

எங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை. இது மேயர், துணை மேயர் ஆகியோர்களுக்குத் தெரியும் என்று சொன்னதோடு நில்லாமல் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் மேயர் சரவணன் கூட்டத்தை ஒத்தி வைத்து விட்டுச் சென்று விட்டார்.

இந்த விஷயம் கட்சி மேலிடத்திற்குத் தெரியவர, தலைமை அவர்களை சென்னைக்கு அழைத்திருக்கிறது. அவர்களிடம் நடக்கும் பேச்சுவார்தையின் பின்னர்தான் இனி வரும் கூட்டங்கள் அமைதியாய் நடக்குமா? என்பது தெரிய வரும்.

இது குறித்து மைதின்கான் ஆதரவாளர்கள் நம்மிடம், மைதின்கான் அதிர்ந்து கூட பேசமாட்டார். அவர் கொலை மிரட்டல் விடுத்தார் என்பது தவறு.

வரி விதிப்பு மேல் முறையீட்டுக்குழு தேர்தல் தொடர்பாய் அனைவரையும் அழைத்துப் பேசி கட்சி நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெற வையுங்கள் என்று கோரிக்கை விடுத்தாரே தவிர, மிரட்டல் விடுக்கவில்லை என்றனர்.

- துரைசாமி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com