கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை - அண்ணாமலை

தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் ஊழல் தடுப்பு துறை மீது பயம் இருக்கிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

சமீபத்தில் கூட எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன், நாங்கள் நன்றாக தான் இருக்கிறோம். ஒரு பிரச்னையும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, "கூட்டணி தேவை எல்லாருக்கும் இருக்கிறது. ஏனென்றால் தனி மரம் எப்போதும் தோப்பாகாது. நான் இங்கு பேசி கொண்டிருக்கும் இடத்தில் கூட ஊழல் தடுப்பு துறை இருக்கிறார்கள். எதுக்காக சொல்கிறேன் என்றால் பாதுகாப்பு எல்லாருக்கும் தேவை தானே. நான் இன்று ஒரு முடிவோடு தான் வந்துள்ளேன்.

கூட்டணி எல்லாருக்கும் தேவை, தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் ஊழல் தடுப்பு துறை மீது பயம் இருக்கிறது. இப்போது, ஊழல் தடுப்பு துறை என் அதிகாரத்தின் கீழ் இருக்கிறதா? நான் தமிழ்நாட்டின் முதலமைச்சரா?. நான் யாரையும் மிரட்டுவதற்காக இதை சொல்லவில்லை. அதாவது சொல்ல வருவது என்னவென்றால் எனக்கு கூட்டணி வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும். கூட்டணி வேண்டாம் என்று சொல்ல முடியாது, எல்லாரும் அரவணைத்து தான் போக வேண்டும்.

எல்லாருக்கும், எல்லாரும் தேவை. எல்லாருக்கும் அரசியல் பிரச்னை இருக்கிறது. யாரும், யாரையும் வேண்டாம் என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் அப்படியோரு பலசாலியை நான் பார்க்கவில்லை. எங்கள் தயவில் தான் வெற்றி பெற முடியும் என்றால், இது நல்ல பேச்சிற்கு அழகல்ல. ஏன் பாஜக தொண்டர்கள் வேலை பார்க்கவில்லையா? தன்மானத்தோடு இருக்க வேண்டும், தன்மானம் இல்லாமல் வெற்றி, தோல்வி கிடைத்து என்ன பலன்.

தன்மானத்தோடு அரசியல் செய்ய வேண்டும், அப்போது தான் எதற்காக வந்தோமோ அதனை சரியாக செய்ய முடியும். தரக்குறைவாக பேசக்கூடாது. செல்லூர் ராஜூ, சிவி சண்முகம் பேசியிருக்கிறார்களே.. அதேபோல் எங்கள் பக்கமும் இரண்டு பேர் இருக்கிறார்கள். பதிலுக்கு நானும் அடித்து ஆடுங்கள் என்று சொன்னால் சரியாக இருக்குமா?. நேருக்கு நேர் பேசுங்கள் எதுவாக இருந்தாலும், உங்களுக்கு பிரச்னையாக இருந்தால் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுங்கள்.

மேடை உள்ளது, மைக் உள்ளது என்பதற்காக வாயில் வருவதை எல்லாம் பேசக்கூடாது. கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை, நானும் எடப்பாடி பழனிசாமியும் சமீபத்தில் கூட தொலைபேசியில் பேசிக் கொண்டோம். நன்றாக தான் இருக்கிறோம், ஒரு பிரச்னையும் இல்லை" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com