கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கும் நிவாரணத்தொகையை எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்துவது நாகரீகமற்ற செயல் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடி உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா சுற்றியுள்ள பகுதிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் மெலட்டூர், கபிஸ்தலம், திருவைக்காகாவூர், உமையாள்புரம் பகுதிகளில் அமைந்திருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புற நோயாளிகள் பிரிவு கட்டிடம், செவிலியர் குடியிருப்பு கட்டிடம் மற்றும் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்களை திறந்து வைத்தும், ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தும், மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”விழுப்புரம் மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு மட்டும் அவர்களின் குடும்ப சூழ்நிலை கருதி நிவாரணத்தொகை வழங்கப்படுவதாகவும், ஜெயலலிதா, இ.பி.எஸ், ஓ.பி.எஸ் முதலமைச்சராக இருந்த போதும் நிதி உதவி வழங்கியதாகவும், மனிதாபிமான அடிப்படையில் வழங்கும் நிவாரணத்தொகையை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்துவது நாகரீகமற்ற செயல் என சாடினார்.
பதவி விலக வேண்டுமானால், கும்பகோணம் நீராடல் மற்றும் கொடநாடு பிரச்னைகளில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவி விலகி இருக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் மற்றும் சீமானும் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் கலால் வரி செலுத்தப்படாமல் உள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அன்புமணி ராமதாஸ் வைத்திருப்பதாகவும், அ.தி.மு.க ஆட்சியில் கும்பகோணம் நீராடலில் இறந்தபோது தமிழக முதல்வராக ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவை, அப்போது இருந்த ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஏன் பதவி விலக சொல்லவில்லை.அதுபோல கொடநாடு கொலை வழக்கில் கொலை மற்றும் 5-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்த போது அப்போதும் கூட ஏன் யாரையும் பதவி விலக சொல்லவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது டெல்டா மாவட்டத்தில் கஜா புயல் மற்றும் பல்வேறு இடர்பாடுகள் நடைபெற்றன. அப்போது மக்களுக்கு ஆறுதல் சொல்வதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது உண்டா? என இ.பி.ஸ் யோசிக்க வேண்டும்” என்றார்.