’’பற்களைப் பிடுங்கியது தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற தென்காசி மாவட்ட எஸ்.பி கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததால்தான் வழக்கறிஞர் மகாராஜனை கைது செய்யப்பட்டுள்ளதாக’’ சமூக நீதி கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
நெல்லை மாவட்டம், ரெட்டியார்பட்டியில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் காவல் நிலையத்தில் பல் உடைப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடிய வழக்கறிஞர் மகாராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலாளர் நெல்சன், மனித உரிமை காக்கும் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் துர்க்கை லிங்கம், பூலித்தேவன், மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பவானி வேல்முருகன், அகில இந்திய காமராஜர் பேரவையின் தலைவர் துரைராஜ், நேதாஜி சுபாஷ் சேனையின் நெல்லை மாவட்ட இளைஞரணி நிர்வாகி சுப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாகப் பேட்டி அளித்தனர் .
இதில், புரட்சி பாரத கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன் கூறுகையில், ‘’நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவரது பற்கள் பிடுங்கப்பட்டு சித்திரவதை செய்த சம்பவத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சுபாஷ் சேனைக் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து விசாரணை அதிகாரியிடம் மனுக்கள் கொடுத்தார். வழக்கறிஞர் மகராஜனின் தொடர் முயற்சியால் வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டு சம்பந்தப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் உட்பட மற்றும் சில காவலர்கள் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்து விசாரணையும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக ஐ.பி.எஸ் சங்கத்தினர் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம், மேலப்பாவூரில் இரு தரப்பினருக்கும் இடையே சுமூகமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சென்ற வழக்கறிஞர் மகாராஜனை கீழப்பாவூருக்கு அருகில் உள்ள கிராமத்திலேயே கைது செய்தனர். அச்சன் புதூர் காவல் நிலையம், கொண்டு சென்ற அவர்கள், உச்ச நீதிமன்ற விதிகளை மீறி பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் இரவு முழுவதும் வைத்திருந்தனர். இந்த சம்பவத்தில் மனித உரிமை முழுவதுமாக மீறப்பட்டுள்ளது. எனவே இந்த தனிமனித உரிமை மீறல் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
அங்கு வந்த தென்காசி மாவட்ட எஸ்.பி நேரடியாக மகராஜனிடம் சென்று ’ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது போடப்பட்டுள்ள புகார்களை ரத்து செய்தால் நான் உடனே விடுவிக்கிறேன். இல்லையென்றால் உங்களை கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன்’என மிரட்டி உள்ளார். இதற்கு வழக்கறிஞர் மகாராஜன் மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து தான் வழக்கறிஞர் மகாராஜன் கைது செய்யப்பட்டு, பின்னர் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால், இங்கு அவரை சிறை நிர்வாகம் எடுக்காமல் திருச்சி சிறைக்கு மாற்றினர். வேண்டுமென்று அவரை அலைக்கழிக்க வேண்டும். அவரை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதுதான் திமுக அரசின் குறிக்கோளாக உள்ளது.
ஒரு நேரத்தில் சமூக நீதியை பேசிய தமிழக முதலமைச்சரே சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஏ.எஸ்.பி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். திமுக அரசு இதுபோன்ற பலி வாங்கும் நோக்கத்தில் ஈடுபட்டாலும் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டே தான் இருப்போம். தென்காசி மாவட்டத்தில் குறிப்பாக மேலப்பாவூர் பகுதியில் 144 தடை உத்தரவு இருப்பதாக தென்காசி மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், 144 தடை உத்தரவு தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் பத்திரிகையில் வரவில்லை. இந்த கைது என்பது வேண்டுமென்றே அவர் மீது பழி வாங்கும் நோக்கத்தோடு போடப்பட்டது.
பல் பிடுங்கிய வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடிய வழக்கறிஞர் மகராஜன் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த வேண்டும்’’என சமூக நீதி கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.