இங்கிலாந்தில் வெள்ளைக்காரரைத் தோற்கடித்த முதல் தமிழர் - சாதித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மகன்

இங்கிலாந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெள்ளைக்காரரை தோற்கடித்து உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற்று இருக்கிறார் தமிழரான வெற்றியழகன்.
இங்கிலான்ந்து மக்களுடன் வெற்றியைக் கொண்டாடும் வெற்றியழகன்
இங்கிலான்ந்து மக்களுடன் வெற்றியைக் கொண்டாடும் வெற்றியழகன்

வெள்ளைக்காரர்கள் இந்தியா வந்து நம்மை ஆட்சி செய்த காலம் இப்போது இங்கிலாந்தில் திரும்பியுள்ளது. ஆம், இங்கிலாந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெள்ளைக்காரரை தோற்கடித்து உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற்று இருக்கிறார் தமிழரான வெற்றியழகன்.

இங்கிலாந்து நாட்டில் செம்ஸ்போர்டு சிட்டியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திருவாரூர் மாவட்ட முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன் மகன் வெற்றி என்கிற வெற்றியழகன் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகியிருக்கிறார். இது திருவாரூர் மாவட்ட அதிமுகவினரையும், அவரது கிராம மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து அவரது உறவினர்களிடம் பேசினோம் “தற்போது பிரிட்டனை ஆளும் கன்சேர்வெட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், பெரும்பண்ணையூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளருமான பாப்பா சுப்பிரமணியன் மகன் வெற்றியழகன் ஆளும் கான்சேர்வெட்டிவ் கட்சியின் சார்பாக செம்ஸ்போர்டு சிட்டி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் தற்போதைய கவுன்சில் டெமோகிராட்ஸ் வேட்பாளர் பேட்ரிக் மேன்லியை விட 163 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியழகன் வெற்றி பெற்றுள்ளார். இங்கிலாந்து வரலாற்றிலேயே தமிழர் ஒருவர் செம்ஸ்போர்டு சிட்டி கவுன்சிலராக கன்சேர்வெட்டிவ் கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ளது இதுவே முதன்முறை என்கிறார்கள்.

திருவாரூரில் 1982 ஆண்டு பிறந்த வெற்றிக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான் 'வெற்றி' எனப் பெயர் சூட்டினார். வெற்றி, சென்னையில் ஆரம்பப் பள்ளி படிப்பை முடித்து, பிறகு சென்னை செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் படிப்பை முடித்தார். தொடர்ந்து 2007-ல் பிரிட்டன் சென்று ஹெரியோட் வாட் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் ஆப் மேனேஜ்மென்ட் பட்டப் படிப்பை முடித்தார்.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட வெற்றி
வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட வெற்றி

தொடர்ந்து அங்கு சமூக சேவையாற்றி வந்த வெற்றி அப்பகுதி மக்களிடையே பண்புடன் பழகி இப்பொழுது 80% ஆங்கிலேயர் மற்றும் 20% இந்தியர்கள் வாழும் பகுதியில் வெற்றி பெற்றுள்ளது இந்திய மக்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என்கிறார்கள்’’ அவரது உறவினர்கள்.

வெற்றி என்ற வெற்றியழகன் இங்கிலாந்து நாட்டில் கவுன்சிலர் தேர்தலில் பெற்ற வெற்றியை திருவாரூர் மாவட்ட அதிமுகவினரும், வெற்றியின் பெரும்பன்ணையூர் கிராம மக்களும் பெரிதும் கொண்டாடி வருகின்றனர்.

மகனின் வெற்றி குறித்து அதிமுக பிரமுகர் பாப்பா சுப்ரமணியனிடம் பேசினோம். “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான் எனக்கு திருமணம் செய்து வைத்தார். எம்.ஜி.ஆர் தலைமையில் தான் திருமணம் செய்யவேண்டும் என ஒன்றே முக்கால் வருடம் காத்திருந்தேன். எம்.ஜி.ஆர் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது அரசியல் காரணங்களுக்காக இந்திராகாந்தி ஆட்சியை கலைத்துவிட்டார். அப்போது தான் நான் மீண்டும் எம். ஜி.ஆர் முதல்வராக ஆன பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என உறுதியெடுத்தேன்.

பின்னர் எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்று இதே பெரும்பண்ணையூருக்கு வந்து என் திருமணத்தை நட்த்தி வைத்தார். அதேபோல் என் மகனுக்கும் அவர்தான் வெற்றி என்று பெயர் வைத்தார். இப்போது நான் எம்.ஜி.ஆரை எடப்பாடியார் வாயிலாக பார்க்கிறேன். என் மகன் இங்கிலாந்து தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற்ற தகவலை கேட்ட அவர் தமிழக தேர்தலிலே அதிமுக வெற்றி பெற்றால் எப்படி மகிழ்ச்சியடைவாரோ அந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தார்’’ என்றார்.

பெரும்பண்ணையூர் மக்களிடம் பேசினோம், “வெளிநாடு சென்றும் எங்கள் ஊர் பெருமையை வெற்றி காப்பாற்றியிருப்பது எங்களுக்கெல்லாம் பெரு மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் இங்கிலாந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர் வெற்றியடைந்திருப்பது இங்கிலாந்து மக்கள் அவர் மீது எந்தளவு நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெற வைத்திருப்பார்கள் என்பதை காட்டுகிறது. அவரது பெயரைப்போலவே இன்னும் அவர் பல வெற்றிகளைப்பெற்று இங்கிலாந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து நல்ல பெயர் பெறவேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை” என்றனர் உற்சாகக்குரலில்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com