தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், 'நான் தருமபுரம் ஆதீனம் சென்ற போது, எனது பாதுகாப்பு வாகனம் மீது ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை' என்று குற்றம் சாட்டியவர், 'திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை' என்றும் தி.மு.க மீதும், தமிழக அரசு மீதும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து, தி.மு.க தலைவர்களும், தமிழக அரசு மற்றும் தி.மு.க தலைவர்கள் குறித்து ஆளுநர் ரவியும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரபல ஆங்கில நாளிதழுக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இதில், திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியானது. இது போன்ற காலாவதியான கொள்கைகளை வைத்துக் கொண்டு திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சி நடைபெறுகிறது' என விமர்சனம் செய்துள்ளார்.
'தமிழக பட்ஜெட்டில் மற்ற மொழிகளைத் தவிர்த்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் 3.25 லட்சம் புத்தகங்களைக் கொண்ட கலைஞர் நூலகத்தை அரசு அமைக்க உள்ளதாக கூறுவது பிரிவினைவாத கருத்து ஆகும். குறிப்பாக, தமிழக காவல்துறை அரசியல் ஆக்கப்பட்டுள்ளது' என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலவரம், கோவை கார் வெடிப்பு மற்றும் வி.ஏ.ஓ படுகொலை போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அப்படி இருக்கும்போது, தமிழ்நாடு எப்படி அமைதிப்பூங்காவாகும்?" என்றும் ஆளுர் ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஆளுநர் மாளிகை நிதியில் விதிமீறல் இருப்பதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'ஆளுநர் மாளிகையில் செலவு செய்யப்படும் நிதியில் விதி மீறல் ஏதும் இல்லை' என்று விளக்கமும் அளித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்து, இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.