'சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் என்று உளவுத்துறை எச்சரித்த பிறகும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழ்நாட்டில் காவல்துறை பாதுகாப்புடன் வெளியிட அனுமதித்தது ஏன்?' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவேண்டாம் என்ற மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, திமுக அரசு திரையிட அனுமதி வழங்கியுள்ளதைக் கண்டித்து, சென்னை அமைந்தகரை, பி.வி.ஆர் திரையரங்கம் முன்பு இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். 'இஸ்லாமிய மக்களை இழிவுப்படுத்தி, இஸ்லாமியர் என்றாலே பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் விதமாக ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் சிலரது சூழ்ச்சியாகவே இது தோன்றுகிறது.
‘காஷ்மீர் பைல்ஸ்’, ‘புர்கா’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘கேரள ஸ்டோரி’ திரைப்படமும் குறிப்பிட்ட ஒரு தரப்பினரை இழிவுபடுத்துவது எந்த வகையிலும் ஏற்க முடியாது.
மதம், வழிபாடு, உணவு, உடை போன்றவை ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமைகளாகும். அதில் தலையிடவோ, இழிவுப்படுத்தவோ அரசு உட்பட எவருக்கும் உரிமையில்லை. ‘உன் மதம் சிறந்தது வழிபடு; என் மதமும் சிறந்தது வழி விடு’ என்பது தான் நமது கொள்கையாக இருக்கவேண்டும்.
சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் என்று உளவுத்துறை எச்சரித்த பிறகும் தி.மு.க. அரசு ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தை காவல்துறை பாதுகாப்புடன் வெளியிட அனுமதித்திருப்பது ஏன்?' என கேள்வி எழுப்பியுள்ளார்.