கரூரில் 7 இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறுத்தம் - செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் தொடரும் ஐ.டி. ரெய்டு

மிரட்டல், அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் வருமானவரித்துறை சோதனை நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல்
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இதனிடையே, செந்தில் பாலாஜி வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

மேலும், டாஸ்மாக் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்று வருதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அண்மையில், தமிழக ஆளுநர் ரவியிடம் புகார் தெரிவித்திருந்தார். இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை தமிழக பா.ஜ.க-வும் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 40 இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல்.

இதேபோன்று, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் கோவையைச் சேர்ந்த செந்தில் கார்த்திக் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கரூரில், சோதனைக்குச் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகளை, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் முற்றைகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.

செந்தில் பாலாஜி வீட்டு முன்பு ஏராளமான தி.மு.க-வினர் குவிந்து வருகின்றனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே, கரூரில் 7 இடங்களில் நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை நிறுத்தப்பட்டுள்ளது. மிரட்டல், அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் வருமானவரித்துறை சோதனை நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . இது தொடர்பாக, காவல் நிலையத்தில் வருமானவரித்துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com