வி.சி.க தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் மீது பா.ம.க சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி, சேலம் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏவும், வன்னியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளருமான கார்த்தி, சேலம் 4 -வது குற்றவியல் நடுவர் மன்றத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கறிஞர் இமயவரம்பன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ கார்த்தி மற்றும் குணசேகர், சிவா ஆகியோர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் யுவராஜ், திருமாவளவன் மீதான அவதூறு வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.