’மதுவிலக்கை அமல்படுத்த முதல்வர் முன் வர வேண்டும்’:திருமாவளவன் பேச்சு

’மதுவிலக்கை அமல்படுத்த முதல்வர் முன் வர வேண்டும்’:திருமாவளவன் பேச்சு

தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுபானம் வகைகளை பெற முடியும் என்கிற ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’’கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை இலக்காக வைத்து அங்குள்ள தமிழர்களிடையே வி.சி.க சார்பில், நாளை வாக்கு சேகரிக்க உள்ளேன். தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவை மையமாக வைத்து பாஜக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைக் குறிவைத்து மதத்தின் அடிப்படையில் வெறுப்பு அரசியலை விதைக்கிறது. கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியை அப்புறப்படுத்துவது தென் மாநிலங்களின் நலனுக்கு இன்றியமையாத தேவை.

கர்நாடகாவில் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாதியில் நிறுத்தியது குறித்து, அண்ணாமலை பதில் சொல்லவேண்டும். அவர் இருக்கும்போதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என ஈஸ்வரப்பா இடைமறித்து நிறுத்தியுள்ளார்.

கன்னட வாழ்த்து பாடலை பாடச் சொல்வது அவர்களுக்கான உரிமை. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில், தமிழ் வாக்காளர்களை அவமதிக்கும் வகையில் அவர் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தானியங்கி இயந்திரம் மூலம் மதுபான வகைகளை பெற முடியும் என்ற ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வசதியை ஏற்படுத்தித் தருவதில் எந்த நியாயமுமில்லை. தமிழக முதல்வர் இதை பரிசீலிக்க வேண்டும்.

படிப்படியாக மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு உள்ள இயக்கம் தி.மு.க. இதை தேர்தல் வாக்குறுதியிலேயே அக்கட்சி உறுதிப்படுத்தி இருக்கிறது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முதல்வர் முன்வரவேண்டும்.

பிரதமர் மோடியின் நூறாவது மன் கி பாத் நிகழ்ச்சியை யொட்டி கருணாநிதி எழுதிய செம்மொழி பாடல் ஒளிபரப்பப்பட்டது. இது அவர்களின் தேர்தல் யுக்திகளில் ஒன்று. தமிழ் மீதான உண்மையான பற்று என்று சொல்ல முடியாது. திருக்குறளை பேசுவது, பாரதியார் பாடலை பேசுவது, அவ்வப்போது தமிழை இடையே எழுதி வைத்து இந்தியில் படிப்பது இவையெல்லாம் அவர்கள் கையாளக்கூடிய தேர்தல் தந்திரங்களில் ஒன்று. இந்தியை திணிக்கவேண்டும், சமஸ்கிருதத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்’’என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com