கொட்டும் மழையில் அண்ணாமலை - சேரையே கவசமாக்கிய பா.ஜ.கவினர் - என்ன நடந்தது?

அடுத்த 9 மாதங்கள் வீடு வீடாகச் சென்று பிரதமர் மோடி செய்துள்ள சாதனைகளை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்
கொட்டும் மழையில் அண்ணாமலை
கொட்டும் மழையில் அண்ணாமலை

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில், பா.ஜ.க மாவட்டத் தலைவர் க. அகோரம் தலைமையில் பாரதப் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, பிரதமர் மோடி மீது கொண்ட அன்பின் காரணமாக, பெருந்திரளாக கூடியிருந்த கூட்டத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அண்ணாமலை, 'விவசாயிகள் நலன், மகளிர் நலன், இளைஞர்கள் நலன், மீனவர்கள் நலன் என, பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சி, அனைவருக்குமான நல்லாட்சியாக விளங்கி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தின் தனிச் சிறப்பாக, புதிய பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் செங்கோல், இங்கிருக்கும் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார் நமது பிரதமர் மோடி.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழக மக்களும் பெருமளவில் வாக்களித்து, இந்திய அளவில் 400 -க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, நமது பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்பார்.

இதற்காக, அடுத்த ஒன்பது மாதங்கள் நாம் அனைவரும், வீடு வீடாகச் சென்று, பிரதமர் மோடி செய்துள்ள நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் மக்கள் விருப்பத்திற்கு மாறாகவும், நேர்மையற்ற, ஊழல் நிறைந்த ஆட்சியாகவும் திமுக ஆட்சி உள்ளது. எனவே, மக்கள் விரோத தி.மு.க ஆட்சியை விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம். அதற்கு மக்கள் அனைவரும் துணையாக இருக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com