தஞ்சாவூர்: மது குடித்து 2 பேர் உயிரிழப்பு - டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்
தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் பாரின் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாஅக டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த சம்பவத்தில் பார் உரிமையாளர் சரவணன், பாரில் மதுபானம் பெற்ற சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கீழவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் 68 வயதான குப்புசாமி. மீன் வியாபாரியான இவர் நேற்று அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை வாங்கி அருந்தியுள்ளார். சற்று நேரத்தில் திடீரென வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
தஞ்சாவூர் பூமான் ராவுத்தன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநரான 36 வயது குட்டி விவேக். இவரும் அதே பாருக்குச் சென்று மது அருந்திவிட்டு வெளியே வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் குறித்து அவர்கள் உட்கொண்ட மதுவில் சாயனைடு கலந்திருந்தாக மாவட்ட ஆட்சி நிர்வாகம் தெரிவித்து இருந்த நிலையில் மேல் ஆய்வுக்கு அனுப்பி சாயனைட் கலந்திருப்பது உறுதியானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.