சென்னை: ஆவடி அருகே உள்ள அயப்பாக்கத்தில் அமைந்து உள்ள தனியார்ப் பள்ளியில் 12வது மாணவர் தலைமை ஏற்பு விழாவில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், " உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருவது வரவேற்கத்தக்கது. அவர் இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திற்குச் சென்று பார்ப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மீண்டும் 2வது முறையாக ஜனாதிபதி ஆவதை தமிழக அரசியல்வாதிகளே தடுத்து விட்டார்கள். அது மிகவும் வருத்தமான விஷயம்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை இந்திய அரசு அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்திலும், மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் வருகிறார்.
பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் அவர்கள் கூறியது போல, "தூங்கும் போது காண்பது கனவு அல்ல.. உன்னைத் தூங்க விடாமல் செய்வது தான் கனவு" என்ற சொல்லுக்கு இணங்க மாணவர்கள் வெற்றி பெற வேண்டும்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. மக்களின் திட்டங்களைச் செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார்.