'தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் லிக்கர் முறைப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பிராசஸ் செய்யப்பட்ட லிக்கர். எனவே, அதை அளவாக பயன்படுத்தினால், தீங்கு பயக்காது' என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களில் கடந்த வாரம் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால், தமிழக அரசு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாய் வழங்கியது.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, மாவட்ட மாநகர காவல்துறை துணை ஆணையாளர் கௌதம் கோயல், குணசேகரன், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் மதுபானம் தொடர்பாக பேசுகையில், 'கள்ளச்சாராயம் யார் விற்பனை செய்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதனை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யாராவது கள்ளச்சாராயம் காய்ச்சினால் அல்லது விற்பனை செய்தாலோ அது தொடர்பாக பொது மக்கள் தகவல் கொடுக்கலாம்.
கள்ள சாராயம் விற்பனை செய்தவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மலைப்பகுதிகளில் கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, பச்சமலை, கொளத்தூர் பகுதி ஆகிய இடங்களில் கண்காணிப்பில் தீவிர படுத்த உள்ளோம். இதற்காக தனிப்படை அமைக்கப்பட உள்ளது.
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது முறைப்படுத்தப்பட்டது. அது ஒரு பிராசஸ் செய்யப்பட்ட லிக்கர். அதை அளவாக பயன்படுத்தினால், தீங்கு பயக்காது.
எனவே, பொது மக்கள் இது போன்ற விழிப்புணர்வு இல்லாமல் தனக்கும் தனது குடும்பத்திற்கும் அரசுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது' என தெரிவித்தார்.