நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதி ,மனிதவள மேம்பாடு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு 643 பயனாளிகளுக்கு 5 கோடி மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடன், ஆதிதிராவிடர் நலத்திட்டக் கடன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உட்பட்ட 12 வகையான கடங்களுக்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், " திமுக ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டுகளில் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதல்வர் முனைப்புடன் செயல்படுகிறார். திமுக ஆட்சி எப்போதெல்லாம் அமைகிறதோ அப்போதெல்லாம் மகளிர் காணச் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது . முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் தர்மபுரி மாவட்டத்தில் முதல் முதலாக மகளிர்க்கென சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டது.
தற்போது அந்த திட்டம் உச்சமடைந்து மகளிருக்கான குழுக்களையும் தாண்டி ஆண்களுக்கான சுய உதவிக் குழுக்களாகப் பரிணாமத்தைப் பெற்றுள்ளது. கலைஞர் ஆட்சியில்தான் காலத்தில் தான் பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.
தி.மு.கவின் இரண்டாண்டு ஆட்சியில் கட்டணமில்லா பேருந்து, மகளிர் உரிமை தொகை போன்றவை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் மகளிர்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் பெண்களின் பொருளாதாரத்தின் ஊன்றுகோலாக அமைந்துள்ளது. மகளிருக்கான உரிமை தொகை மூலம் ₹1000 வழங்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் பெற்று விண்ணப்பித்து வருகின்றனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தை நடத்துவார்களா? நடத்த மாட்டார்களா? என்ற கேள்வி எழுந்தது. இந்த அரசு சொன்ன வாக்குறுதி மட்டுமல்ல சொல்லாத வாக்குறுதியும் நிறைவேற்றி வருகிறது. 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
தமிழகத்தில் 7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறு குறு தொழில் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கி கடன் வழங்கப்படும்" என்றார்.