நாளை முதல் மீண்டும் அண்ணாமலை நடைபயணம் - முழு விவரம்
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நாளை முதல் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மீண்டும் நடை பயணத்தை தொடங்குகிறார்.
ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். ராமேஸ்வரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி இந்த நடைபயணம் தொடங்கியது. இந்நிலையில், அண்ணாமலை நடைபயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் பேசுகையில், நாளை மறுநாள் அதாவது, 9-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு காரியாப்பட்டியில் நடை பயணத்தை தொடங்க உள்ளார்.
இதனைத்தொடர்ந்து, திருச்சுழியில் ரமண மகரிஷி இல்லத்தை பார்வையிட உள்ளார். மாலையில் அருப்புக்கோட்டையில் நடை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அடுத்து, வரும் 10-ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகரில் பாண்டியன் நகரில் நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை, விருதுநகர்-சாத்தூர் ரோடு சந்திப்பில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர், மாலையில் சிவகாசியில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
இதனைத்தொடர்ந்து, 11-ம் தேதி காலை சாத்தூரில் நடை பயணத்தை தொடரும் அண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார்.
இதனைத்தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் நடைபயணத்தை நிறைவு செய்கிறார். பின்னர் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார் என்றார்.