பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவிக்க தயாரா? - அமித் ஷாவுக்கு சவால் விட்ட மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடி மேல், அமித் ஷாவுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவிக்கத் தயாரா? என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

காவிரி டெல்டா பகுதி விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, 'தமிழரை பிரதமராக ஆக்கப் போகிறேன் என்று அமித் ஷா சொன்னது மகிழ்ச்சி. பிரதமர் மோடி மேல், அமித் ஷாவுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை.

வரும் 2024-ல் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை சவுந்திரராஜன், எல்.முருகன் போன்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.

தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை பா.ஜ.க அரசு கொடுத்திருப்பதாக அமித் ஷா ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறார். நான் சேலத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் தெளிவாக சொல்விட்டேன். அதாவது, பா.ஜ.க ஆட்சி இருந்தபோது, எந்த சிறப்புத் திட்டமும் இந்த 9 வருடங்களில் தமிழ்நாட்டிற்கு வரவில்லை.

ஆனால், ஏற்கனவே காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த தி.மு.க அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஆட்சியில் என்னென்ன சிறப்புத் திட்டங்கள் வந்தது என்பதை பட்டியல் போட்டு நான் காண்பித்து இருக்கிறேன். அவர் அதைப் படிக்கவில்லையா? இல்லை அதைப் படித்து அதை யாரும் எடுத்துச் சொல்லவில்லையா? என்பது தெரியவில்லை.

ஆனால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, சென்னைக்கு புதிய மெட்ரோ ரயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம், சேது சமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம் ஆகியவை வந்துள்ளது.

மேலும், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை என எண்ணற்ற திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இதேபோல தமிழகத்திற்கு என்ன சிறப்பு திட்டங்களை பா.ஜ.க கொண்டு வந்தது என்பது தான் கேள்வி.

ஜிஎஸ்டி-யில் ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசிற்கு நிதி கொடுத்துக் கொடுக்கிறது. அதில், தமிழகம் தான் அதிக ஜி.எஸ்.டி கொடுத்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டிற்குத் தான் மத்திய அரசு மிகவும் குறைவான நிதி கொடுக்கிறது. மற்ற மாநிலங்களுக்கெல்லாம் அதிகமாக நிதி கொடுத்துள்ளது.

அதேபோல, மதுரையில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடியே வந்து அடிக்கல் நாட்டினார். அதற்குப் பின் பலமுறை அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். பணி 50 சதவீதம், 75 சதவீதம் முடிந்துவிட்டது என்றனர். இதுவரை எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதையெல்லாம் மூடி மறைக்கும் வகையில் அமித் ஷா பேசிவிட்டுச் சென்றுள்ளார்' என்று குற்றம் சாட்டினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com