'என்.எல்.சி விவகாரத்தில் திமுக அரசு ஏன் அவசரம் காட்டுகிறது' - ஜி.கே.வாசன் கேள்வி

'என்.எல்.சி - காக விளை நிலங்களைக் கையகப்படுத்துவது விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்குச் சமம்' என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
'என்.எல்.சி விவகாரத்தில் திமுக அரசு ஏன் அவசரம் காட்டுகிறது' - ஜி.கே.வாசன் கேள்வி

ராமேஸ்வரத்தில் நடக்கும் 'என் மண் என் மக்களின்' பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் மதுரை விமான நிலையம் வந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "என்எல்சி - க்காக நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு இவ்வளவு அவசரம் காண்பிக்கத் தேவையில்லை. குறிப்பாக விளை நிலங்களைக் கையகப்படுத்துவது என்பது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக இருக்கிறது. உடனடியாக இந்த அவசர பணியை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வளவு அவசரத்திற்கு எந்த விதமான அவசியமும் கிடையாது என்பதுதான் எங்களுடைய கருத்து.

மணிப்பூர் விவகாரத்தை பொறுத்தவரையில் மத்திய பா.ஜ.க தலைமையிலான அரசு உண்மை நிலைகளைப் பாராளுமன்றத்தில் பேசத் தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்வது என்பது தேவையற்ற ஒன்று. உண்மை நிலவரம், அங்கு நடக்ககூடிய பிரச்சனைகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் செயல்படுவது நிச்சயமாக ஏற்புடையது அல்ல.

மணிப்பூரைப் பொறுத்தவரையில் தற்போது அமைதி திரும்பிக் கொண்டு இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதை 100% முழுமையாக வேண்டும் என அத்தனை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. பாராளுமன்றத்தில் பேசுவதற்குத் தடையாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கிறார்கள். இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது.

காவிரி டெல்டா பகுதிக்குக் காவிரி தண்ணீரை முறையாகக் கர்நாடகா அரசிடம் பேச வேண்டிய நேரத்தில் பேசி விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுக்காதது தமிழக அரசுடைய மிகப் பெரிய தவறு என நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்பாவி விவசாயிகளை எப்படியாவது திசை திருப்பலாம் என நினைக்கிறது. இதற்கு விவசாயிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். உண்மை நிலையை அவர்கள் மனதில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com