தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டு முடிந்து 3வது ஆண்டு துவங்கியுள்ள நிலையில், 3-வது முறையாக அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையும், சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறையும் கொடுக்கப்பட்டுள்ளது. புதியதாக பதவி ஏற்றுக்கொண்ட டி.ஆர்.பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கவனித்த நிதி, மனிதவள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி மேலாண்மை, மனிதவள மேலாண்மை, ஓய்வூதியம், புள்ளியியல் ஆகிய துறைகளை தங்கம் தென்னரசு கவனிப்பார். தங்கம் தென்னரசு ஏற்கனவே வகித்து வந்த தொல்லியல் துறையை அவரே கவனிப்பார்.
பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை ராஜ்பவன் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.