தமிழக அமைச்சரவையில் விரைவில் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 3 பேர் துணை முதலமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்று தற்போது, வரும் 7ம் தேதி அன்று 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதில், தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர் அமைச்சர்களின் செயல்பாடுகள் மதிப்பீடாக வைத்து, அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, மே 4ம் தேதி அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்போது, தமிழகத்திற்கு 3 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அந்த வகையில், தற்போதைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சீனியர் அமைச்சர் துரைமுருகன், பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த கணேசன் ஆகியோர் துணை முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளதாகக் கோட்டை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 'தற்போது அறிவிக்கப்பட உள்ள அறிவிப்பில், புதுமுகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. நிர்வாக வசதிக்காக அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்கள் மாற்றியமைக்கப்படலாம், எதுவாக இருந்தாலும் அது முதலமைச்சர் ஸ்டாலினின் இறுதி முடிவுப்படித்தான் செயல்படுத்தப்படும்' என தி.மு.க மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
- கே.என்.வடிவேல்