மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குறித்து அவதூறு புகாரில் தமிழக பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தி.நகர் இல்லத்தில் கைது செய்யப்பட்டு மதுரை அழைத்து செல்லப்பட்டார்.
தமிழக பா.ஜ.க மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். ட்விட்டர் சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படும் அவர், தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருபவர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சரியாக 11.15 மணிக்கு சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த அவரை காக்கி உடை அணியாமல் வந்த மதுரை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதை அறிந்த அவரின் ஆதரவாளர்கள் சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையரகம் அலுவலகம் வெளியே எதற்காக அவரை கைது செய்தீர்கள்? யார் அவரை கைது செய்தார்கள் என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, எஸ்.ஜி சூர்யா கைது செய்யப்பட்டதை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட அவர்கள் கலைந்து சென்றனர்.