தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஜூன் முதல் வாரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க-வை வளர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த சுற்றுப்பயணம் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் பா.ஜ.க தலைவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த சுற்றுப் பயணத்தின் போது தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார்.
அதேபோல, விவசாயிகள், இளம் வயது சாதனையாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோரை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
கர்நாடக தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற பின்னர், தமிழகம் வரும் அண்ணாமலை, ஜூன் முதல் வாரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் அண்ணாமலை, படிப்படியாக அடுத்த அடுத்த தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் முறைப்படி வெளியாக உள்ளது.