காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி உட்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
பழைய பதவியிலேயே நீதிபதி தொடர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சூரத் நீதிபதி உட்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தவர் குஜராத் நீதிபதி எச்.எச். வர்மா. 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தார். இது மோடி சமூகத்தினரை இழிவுபடுத்திவிட்டதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனால், அவரது எம்.பி பதவியும் உடனே பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்தி தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக குஜராத் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.
இதனிடையே ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மா உள்ளிட்டோருக்கு குஜராத் உயர்நீதிமன்றம் பதவி உயர்வு வழங்கியது.
நீதிபதிகளுக்கான பதவி உயர்வுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால், அதனை பொருட்படுத்தாமல் எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 பேருக்கு குஜராத் உயர்நீதிமன்றம் பதவி உயர்வு கொடுத்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ”பதவி உயர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இத்தகைய பதவி உயர்வு அறிவிப்பு சட்டவிரோதமானது. இதனால் நீதிபதிகளின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது’’ என அதிரடியான உத்தரவை பிறப்பித்தனர்.