ரூ.500 கோடி செலவில் காலை உணவு திட்டதிற்காக விரைவில் சுய- உதவிக்குழு மற்றும் சமையல்கார்கள் தேர்வு நடைபெற உள்ளது. யாரும் லஞ்சம் கொடுத்துது ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது சில மாவட்டங்களில் பஞ்சாயத்து மற்றும் யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமீபத்தில் 2023ல் பட்ஜெட்டில் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.500 கோடி செலவில் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை விரிவாக செயல்படுத்துவது தொடர்பாக அரசு புதிய வழிக்காட்டி முறைகளை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், காலை உணவுத்திட்டத்திற்கு நியமிக்கப்படும் சுய உதவிக்குழுவின் உறுப்பினர்கள் அதே அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும். தமிழக ஊரக வாழ்வாதார இயக்க செயல்பாடுகளில் அந்த சுய உதவிக்குழுக்களுக்கு 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு யூனியன்களிலும் உள்ள சுயஉதவிக்குழுக்கள் கூட்டமைப்பில் அவை உறுப்பினராக இருக்க வேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு தேர்தெடுக்கப்படும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சமையல்காரர் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது.
காலை உணவு திட்டத்திற்கு சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சமையல்காரர் பணியிடங்கள் ஆகியவை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதற்கு யாரும் லஞ்சம் மற்றும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மீறி யாராவது லஞ்சம் வசூலித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அதில் கூறப்பட்டுள்ளது.