கள்ளச்சாராய சாவுகள்: தமிழக அரசின் நடவடிக்கை என்ன?- முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி - முழு விவரம்

முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்ற புகார் ஆதாரம் அற்றது
ஆறுதல் கூறும் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆறுதல் கூறும் முதலமைச்சர் ஸ்டாலின்

'கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுத்திட வேண்டும் என்ற தமிழக அரசின் கடுமையான உத்தரவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல், கள்ளச்சாராய விற்பனையை கண்காணிக்கத் தவறியவர்கள் மீதும் இந்த அரசு தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கும்' என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.05.2023) விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது , 'விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இருக்கக்கூடிய எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பலர் கள்ளச் சாராயம் அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.

இது அரசினுடைய கவனத்திற்கு வந்தவுடன் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை போன்ற பல்வேறு மருத்துவமனைகளுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 9 பேர் இறந்திருக்கிறார்கள். மேலும் 40 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும் 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், ஒருவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்கி, உயிர்களை காப்பாற்றிடுமாறு மருத்துவர்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள், மெத்தனால் எரிசாராயத்தை பயன்படுத்தியதால், இந்தத் துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

இதில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரின் நடவடிக்கையால் உடனடியாக கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், இந்தச் சம்பவம் நடைபெற காரணமாக இருந்த அனைவரையும் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், பெருக்கரணை கிராமத்தில் 5 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்த துயரச் சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. மேலும் 7 நபர்கள் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

உடனடியாக விசாரணையின் போது இங்கும் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளவர்கள் மெத்தனால் பயன்படுத்தியுள்ளதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தினுடைய பாட்டில்களில் கள்ளச்சாராயத்தை ஊற்றி விற்பனை செய்திருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. இந்த 2 சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிட உத்தரவிட்டிருக்கிறேன்.

மேலும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கக்கூடியவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மட்டுமன்றி, இதற்குக் காரணமானவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

இதுதவிர, தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள் இத்தகைய கள்ளச்சாராய நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுத்திடும் பொருட்டு, இப்பிரச்சனையின் மூலக்காரணத்தை கண்டுபிடித்து ஒழித்திட ஏதுவாக, இந்த 2 சம்பவங்கள் குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்படும்.

மேலும், கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுத்திட வேண்டும் என்ற அரசின் கடுமையான உத்தரவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல், கள்ளச்சாராய விற்பனையை கண்காணிக்கத் தவறியவர்கள் மீதும் இந்த அரசு தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கும்' என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 'நான் முதலிலேயே சொல்லிவிட்டேன். 9 பேர் இறந்திருக்கிறார்கள். இங்கு இறந்திருக்கிறார்கள், செங்கல்பட்டில் மேலும் செங்கல்பட்டில் 7 பேரில் 5 பேர் மருத்துவமனையில் இருக்கிறார்கள். மேலும் 40 பேர் ஒண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்ற புகார் ஆதாரம் அற்றது. சில பேருக்கு டிரிப்ஸ் ஏற்ற வேண்டும், அதற்குப் பிறகுதான் மருந்து, மாத்திரைகள் கொடுக்க வேண்டும், இதில் சில மருத்துவ முறைகள் இருக்கிறது. அதனால், மருத்துவ ரீதியாக செய்து கொண்டிருக்கிறார்கள், நன்றாக விசாரித்து விட்டேன். நீங்கள் சொன்னதுபோல ஒருவர், 2 பேர் நீங்கள் சொன்னது போல புகார் செய்தார்கள், அது உண்மையல்ல' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com