விழுப்புரத்தில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 11 பேர் உயிரிழந்த நிலையில், ஆப்ரகாம் என்பவர் தற்போது உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பலர் கள்ளச் சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 9 பேர் இறந்திருக்கிறார்கள். மேலும் 40 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும் 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், ஒருவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், பெருக்கரணை கிராமத்தில் 5 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்த துயரச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதில், 7 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள், மெத்தனால் எரிசாராயத்தை பயன்படுத்தியதால், இந்தத் துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதேபோல, செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி-க்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில காவல்துறையினர் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை பா.ம.க தலைவர்அன்புமணி ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, 'சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே காரணைப் புதுச்சேரி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடை மற்றும் பார் ஆகியவற்றை அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு சூறையாடியுள்ளனர்.
மதுவுக்கு எதிராக மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு கோபம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு தான் இதுவாகும். பெண்கள் கடைபிடித்த வழிமுறை வேண்டுமானால் சரியானதாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், மதுவுக்கு எதிரான அவர்களின் உணர்வு மதிக்கத்தக்கது. அவர்களின் போராட்ட உணர்வை நான் பாராட்டுகிறேன்.
காரணைப் புதுச்சேரி பகுதியில் உள்ள மதுக்கடை மற்றும் பார்களால் அப்பகுதியில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அனுபவித்து வரும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அங்கு மது குடிக்கும் குடிமகன்கள் போதையில் அருகில் உள்ள வீடுகளின் வாசல்களில் மயங்கி விழுந்து கிடப்பதும், அப்பகுதி வழியாக செல்லும் பெண்கள், மாணவ, மாணவியரிடம் தவறாக நடப்பதும் வாடிக்கையானதாகி விட்டன. இதை சகித்துக் கொள்ள முடியாமல் தான் பெண்கள் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவது இது முதல்முறையல்ல. கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் சிவகங்கை மாவட்டம், அகிலாண்டபுரத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு சிலர் தாறுமாறாக ஓட்டிய வாகனம் மோதி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதி பெண்கள் திரண்டு சென்று அகிலாண்டபுரம் மதுக்கடையை சூறையாடினர்.
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு மதுக்கடைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மதுவுக்கு எதிரான மக்களின் இந்த கோபத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தால் அது சட்டம் - ஒழுங்கு சிக்கலாக மாறும் ஆபத்து உள்ளது. எனவே, காரணைப் புதுச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதுக்கடை மற்றும் பார் ஆகியவற்றை அரசு உடனடியாக மூடவேண்டும்' என்றார்.