தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த 28ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை பயணம் என்ற பெயரில் "என் மண் என் மக்கள்" பிரச்சாரத்தைத் தொடங்கினார். 7வது நாள் பாதயாத்திரையாகச் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தென்மாபட்டு என்ற இடத்திலிருந்து தொடங்கினார். அதில் தொடர்ந்து தேரோடும் வீதி, நான்குரோடு, பெரிய கடை வீதி, உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை அடைந்து அங்குப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், 'தமிழகத்தில் மதுவுக்கும், ஊழலுக்கும் தான் முதலிடம் உள்ளது. பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளது. அதனால் அதிகளவில் வேலைவாய்ப்பு உருவாகப் போகிறது என முதல்வர் டுவிட் செய்தார். ஆனால் அந்நிறுவனம் கர்நாடகத்துக்குச் சென்றுவிட்டது. இதற்குக் காரணம் தமிழகத்தில் அனுமதிக்க 30 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்பது தான் காரணம் என்றார்.
பின்னர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் செல்லூர் ராஜூ பேசியது குறித்து கேட்ட போது, "அரசியலில் விஞ்ஞானிகள் என்று நினைத்துப் பேசிக் கொண்டிருப்பவர்களுக்குப் பதில் சொல்லி என் தரத்தை நான் தாழ்த்திக் கொள்ள விரும்ப வில்லை என்றார். மெஜாரிட்டி, மைனாரிட்டி பாலிடிக்ஸ் தான் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது. மைனாரட்டி, மெஜாரிட்டி என்பது ஒரு புரிதலுக்காகக் கொண்டு வரப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மைனாரிட்டி என்ற வார்த்தைகளுக்கு மட்டும் தான், சிறப்புச் சலுகைகள் உள்ளது" என்றார்.