சீர்காழி நகராட்சியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் தரைக்கடை வியாபாரிகளுக்கு இலவசமாக தள்ளுவண்டி வழங்கியதில் நகராட்சி அதிகாரிகள் கமிஷன் பெற்றதாக கூறப்படும் புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சியில் மத்திய அரசின் ஸ்வநிதி திட்ட்த்தின் கீழ் சுயவேலைவாய்ப்பு, சுய வாழ்வு மற்றும் தன்னம்பிக்கை ஆகியற்றை மீட்டெடுக்கும் விதமாக தெருவோர தரைக்கடை வியாபாரிகளுக்கு இலவசமாக தள்ளுவண்டி வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி சேர்மன் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீர்காழி தி.மு.க எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தரைக்கடை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகளை வழங்கினார்.
இந்த இலவச தள்ளுவண்டிகள் வழங்க ஒவ்வொரு வண்டிகளுக்கும் தலா 2,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை நகராட்சி அதிகாரிகள் கமிஷன் வாங்கியதாகத் தரைக்கடை வியாபாரிகள் தரப்பில் புகார்கள் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து தரைக்கடை வியாபாரிகள் தரப்பில் பேசினோம். “கடும் மழை மற்றும் வெயில் காலங்களில் வியாபாரம் செய்வதில் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறோம். வியாபாரமும் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். இந்த நிலையில் மத்திய அரசு எங்கள் கஷ்டங்களை தீர்க்கும் விதமாக ஒரு பைசா கூட செலவில்லாமல் எங்களுக்கு மேற்கூரை அமைத்த பாதுகாப்பான தள்ளுவண்டிகளை கொடுக்கிறது என தெரிந்து அதற்கு சீர்காழி நகராட்சியில் விண்ணப்பம் செய்தோம். விண்ணப்பிக்கும்போதே ஒரு கணிசமாக தொகையை லஞ்சமாக பெற்றுக்கொண்டனர். இப்போது வண்டிகளை வழங்குவதற்கு முன் ஒவ்வொரு வண்டிகளுக்கும் நகராட்சி அதிகாரிகள் தலா ரூ.2000 முதல் ரூ.5000 வரை கமிஷனாக வாங்கினார்கள்.
இப்போது 9 பேருக்கு வண்டிகள் கொடுத்துள்ளனர். விண்ணப்பித்த மற்றவர்களுக்கு இன்னும் நிதி வரவில்லை. வந்தவுடன் தரப்படும் என்று கூறியிருக்கின்றனர். ஏற்கனவே கஷ்ட ஜீவனம் நடத்தும் எங்களுக்கு மத்திய அரசு கஷ்டத்தை தீர்க்கும் விதமாக ஒரு நல்ல திட்டத்தை கொண்டுவந்தால் அதிகாரிகள் அதிலும் ஊழல் செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.”என்றனர்.
இது ஒருபுறம் இருக்க ”சீர்காழி நகராட்சியை பொறுத்தமட்டில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், கட்டிட வரி விதிப்பு, பில்டிங் அப்ரூவல் என எதைத் தொட்டாலும் பணம் கொடுத்தால் மட்டுமே காரியம் நடைபெறும். லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உயரதிகாரிகளிடம் புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. கவுன்சிலர்களும் இதனை கண்டுகொள்வதில்லை” என பொதுமக்கள் தரப்பிலும் புகார்கள் கூறப்படுகிறது.
இது குறித்து சீர்காழி நகராட்சி ஆணையர் [பொ] ஹேமலதாவிடம் பேசினோம். ”அப்படியா? தள்ளுவண்டிக்கு கமிஷன் பெற்றது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. பில்டிங் இன்ஸ்பெக்டர் செக்ஷன் அதிகாரிகள்தான் இதுகுறித்து பார்க்கின்றனர். நான் என்ன? ஏது? என்று விசாரிக்கிறேன்” என்றார்.
இதற்கிடையே இந்தப் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய விசாரணை ஒன்றை மேற்கோண்டு வருவதாகவும் சொல்லப்பட அதிகாரிகள் தரப்பினர் கிலியுடன் வலம் வருகிறார்களாம்.
-ஆர்.விவேக் ஆனந்தன்