சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாடு- சிங்கப்பூர் இடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில், சென்னையில் வரும் 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழக முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-ம் தேதி அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில், இன்று (மே24) சிங்கப்பூர் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அங்குள்ள முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மேலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனை நேரில் சந்தித்தார்.
அப்போது, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடினர். இந்த சந்திப்பின்போது, பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்தும் பேசப்பட்டது.
அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூரைச் சேர்ந்த "செம்ப்கார்ப்"உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் பசுமை சக்தியை உருவாக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனிடையே, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் தமிழ்ச்சங்களுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில், “வேர்களைத் தேடி" என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்காக சிங்கப்பூரில் தேர்வு செய்யப்பட்ட 10 இளைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.