கர்நாடக முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்பு - சோனியாகாந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்கும் விழா இன்று (சனிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடக்கிறது.
சித்தராமையா, DK சிவகுமார்
சித்தராமையா, DK சிவகுமார்

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் சோனியாகாந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகளில் 135 தொகுதிகளை கைப்பற்றி தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது காங்கிரஸ். இதில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

டெல்லியில் 4 நாட்கள் நடந்த இழுப்பறிக்கு பிறகு சித்தராமையா கர்நாடக முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் டெல்லியிலிருந்து பெங்களூரு திரும்பிய சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார், ராஜ்பவனுக்கு நேரில் சென்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்கும் விழா இன்று (சனிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இதில் சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் 25 அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இந்த பதவியேற்பு விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். சோனியாகாந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர்சிங் சுகு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com