சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களை இன்று கூட்டத்தில் பங்கேற்க உத்தரவிட்டு அஜித் பவார் ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சரத் பவார் மற்றும் அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் போட்டி பிரிவுகள், இருவரும் தத்தமது பிரிவுகளுக்கு இரண்டு தலைமைக் கொறடாக்களை நியமித்துள்ள நிலையில், இன்றுமும்பையில் தனித்தனியான கூட்டங்களை நடத்தவுள்ளனர்.
தெற்கு மும்பையில் உள்ள ஒய்.பி. சவான் மையத்தில் பிற்பகல் 1 மணிக்கு சரத் பவார் தரப்பு ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதே நேரத்தில் அஜித் பவார் குழு காலை 11 மணிக்கு புறநகர் பாந்த்ராவில் உள்ள மும்பை கல்வி அறக்கட்டளை வளாகத்தில் கூடுகிறது.
சரத் பவார் கோஷ்டியின் தலைமைக் கொறடாவாக செயல்படும் ஜிதேந்திர அவாத், மாநிலம் முழுவதும் உள்ள கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களை கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கிடையில், அஜித் பவார் தனது கோஷ்டிக்கு அனில் பாட்டீலை தலைமைக் கொறடாவாக நியமித்துள்ளார். அவர் கூட்டத்தை நடத்த தீவிரமாக அழைப்பு விடுத்துள்ளார்.
போட்டி அணி பிரிவிற்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ-க்களின் உண்மையான எண்ணிக்கையை இந்த சந்திப்பு வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவைத் தாண்டி, மாநிலங்கள் முழுவதும் பாஜக எவ்வாறு கட்சி பிரிக்கலாம் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் சிவசேனா-பா.ஜ.க அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவியேற்ற அஜித் பவார், 53 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் தனக்கு ஆதரவளிப்பதாக உறுதிபடக் கூறினார். இருப்பினும், சரத் பவார் முகாம் இதை மறுக்கிறது. அஜித் பவார் 13 எம்.எல்.ஏக்களின் ஆதரவை மட்டுமே பெற்று இருக்கிறார் என்று கூறுகிறது.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் 53 எம்.எல்.ஏ-க்களுடன், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க அஜித் பவாருக்கு குறைந்தது 36 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும். 36 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அவரது முகாம் வாதிடுகிறது. அதே நேரத்தில் கூட்டணிக் கட்சியான பாஜக, 40 -க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அஜித் பவாரை ஆதரிப்பதாகக் கூறுகிறது. மறுபுறம், அமைச்சர்களாக பதவியேற்ற 8 எம்.எல்.ஏ-க்களைத் தவிர, மீதமுள்ள எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு விசுவாசமாக இருப்பதாக சரத் பவார் தரப்பு கூறுகிறது.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஏற்கனவே அஜித் பவார் மற்றும் அமைச்சர்களாக பதவியேற்ற 8 எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதி நீக்க மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, சரத் பவாரால் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட ஜெயந்த் பாட்டீல் மற்றும் ஜிதேந்திர அவாத் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய அஜித் பவார் முகாம் கோரியுள்ளது.