அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆளுநர் 5 பக்கம் விளக்கம் கொடுத்துள்ளார். அது தொடர்பான கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி விரிவான கடிதம் எழுதியுள்ளார். 5 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் செந்தில் பாலாஜி நீக்கத்திற்கான முக்கிய காரணம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், செந்தில் பாலாஜி மீது ஊழல் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்குகள் உள்ளது. எனவே, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது சரியாக இருக்காது.
செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கவசமாக அமைந்துள்ளதாக உச்ச நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது அவருக்கு கூடுதல் பலமாக அமைந்துவிடும்.
ஜூன் 15 -ம் தேதி செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் குறித்து கோரிய போது, அவரது உடல் நிலை மட்டுமே காரணமாக சொல்லப்பட்டது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது குறித்து முதலமைச்சராக உள்ள நீங்கள் எனக்கு தெரிவிக்கவில்லை.
மேலும், ஜூன் 16 -ம் தேதி அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க மீண்டும் கோரிக்கை விடுத்தேன் என்பது உள்ளிட்ட முக்கிய கருத்துக்களை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ஆலோசனையின் பேரில், உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்திய பிறகு ஆளுநர் இறுதி முடிவு எடுக்கப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.