செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல் - பண மோசடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல் - பண மோசடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த சில மாதங்களாகவே விசாரணை செய்யப்பட்ட நிலையில் இரு தரப்பு வாதங்கள் முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2011-ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை அதிமுக ஆட்சிக்காலத்தில் செந்தில்பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி செந்தில்பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பான வழக்கை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றம் சாட்டியவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் சமாதானமாய் போக விரும்பிய நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக தர்மராஜ், ஒய்.பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை முதலிலிருந்து விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

ஆனால் மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்காத நிலையில் இதனை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது. இதனிடையே அமலாக்கத் துறை சார்பிலும் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும், செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்துசெய்த ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த சில மாதங்களாகவே விசாரணை செய்யப்பட்ட நிலையில் இரு தரப்பு வாதங்கள் முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை கிருஷ்ண முராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்த நிலையில், இவ்வழக்கில் சிறப்புக்குழு அமைத்து விசாரணையைத் மீண்டும் தொடர்ந்து நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உச்சநீதிமன்ற உத்தரவால் தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com