’’அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை காலை இதய அறுவை சிகிச்சை நடைபெறும்’’என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ‘’அறுவை சிகிச்சை செய்வதற்கான உடல் தகுதியை நேற்று இரவு பெற்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஒட்டு மொத்த மருத்துவர்களின் நேர்மை தன்மையும், மருத்துவ குணத்தையும் சந்தேகப்படுகிறது அமலாக்கத்துறை. ஒருவர் தனக்கு என்ன பாதிப்பு இருந்தாலும் இது போன்று திறந்தவெளி இதய அறுவை சிகிச்சை செய்து கொள்வார்களா என்று அமலாக்கத்துறை தான் விளக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னை, கரூரில் உள்ள இல்லங்கள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் கடந்த ஜூன் 13ஆம் தேதி அமலாகத்துறையினர் தொடர் சோதனைகளை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி அதிகாலையில் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜிக்கு காலையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவனை நிர்வாகமும், ஈ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகமும் பரிந்துரை செய்திருந்தனர். சிகிச்சையில் இருந்த செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைப்படி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டு சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பைபஸ் அறுவை சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிதது. அடுத்து சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் இருந்து காவிரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.
செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றியதற்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் நாளை அதிகாலையிலேயே செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப் போவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.