‘செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்பு சலுகையா?’ - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய சலுகை மட்டுமே வழங்கப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. வேறு எந்த சலுகையும் அவருக்கு வழங்கப்படவில்லை' என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ‘ஆன்லைன் விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

எனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசு தனது தரப்பு நியாயத்தை உரிய முறையில் எடுத்துக்கூறும்.

புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. வேறு எந்த சலுகையும் அவருக்கு வழங்கவில்லை. சட்டப்படி வழங்கவும் முடியாது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அவருக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் லஞ்ச ஒழிப்பு புகாரில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நீதிமன்ற உத்தரவுப்படி யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ? அவர்களிடமே சட்டப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் அல்லது மூன்றாம் நபர்களிடம் ஒப்படைக்க முடியாது. இந்த விவகாரத்தில் மட்டுமல்ல. எந்த ஒரு காரியத்திலும் தமிழக அரசு சட்டப்படியே செயல்படும்.

மேலும் கொடநாடு வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தமிழக அரசு வெளிக்கொண்டு வரும். இந்த வழக்கில் மறு விசாரணைக்காக கேட்டுள்ளோம்.

யார் யார் எல்லாம் தவறு செய்தார்களோ? அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னர் நிறுத்தப்படுவார்கள். தவறு செய்தவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் அவர்கள் தப்பிக்கவே முடியாது' என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com