தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
உத்தரவை நிறுத்தி வைத்திருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் தெரிவித்து இருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெறவும் ஆளுநர் ரவி முடிவு செய்துள்ளார். தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கி நேற்று இரவு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டு இருந்தார்.
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடித்தால் அவர் மீதான விசாரணை பாதிக்கப்படும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை 5 மணி நேரத்திலேயே நிறுத்தி வைத்தார் ஆளுநர். முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆளுநர் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலால் ஆளுநர் முடிவில் மாற்றம் எனக் கூறப்படுகிறது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப் பரிந்துரைத்தார்.
இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் வகித்து வந்த இரண்டு துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒப்படைக்கப்பட்டன. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்த நிலையில் அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புக்கொள்ளவில்லை. அதனைத்தொடர்ந்து, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் எனக் கடந்த 16ம் தேதி அரசாணை வெளியிட்டது.